சேறு, சகதியுடன் 53 டி.எம்.சி.,: தமிழக அணைகளின் நிலவரம்
சேறு, சகதியுடன் 53 டி.எம்.சி.,: தமிழக அணைகளின் நிலவரம்
ADDED : ஏப் 26, 2024 07:09 AM

சென்னை: கத்திரி வெயில் துவங்குவதற்கு முன்னரே, தமிழக அணைகளில் நீர் இருப்பு, சேறு, சகதியுடன் சேர்ந்து 53 டி.எம்.சி.,யாக குறைந்துள்ளது.
மாநிலம் முழுதும் நீர்வளத்துறை பராமரிப்பில், 90 அணைகள் உள்ளன. இவற்றின் ஒட்டு மொத்த கொள்ளளவு 224 டி.எம்.சி.,யாகும். சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், புழல், தேர்வாய் கண்டிகை ஏரிகளும், புனரமைப்பு பணிக்காக அணைகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளன.
பல அணைகள் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ளதால், அவற்றுக்கு ஜூனில் துவங்கும் தென்மேற்கு பருவமழை காலத்தில் நீர்வரத்து கிடைக்கும். தற்போது கோடை வெயில் காரணமாக அனைத்து அணைகளிலும் நீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது.
பல சிறிய அணைகள் ஏற்கனவே முழுமையாக வறண்டு கிடக்கின்றன. அதிகபட்சமாக சேலம் மேட்டூர் அணையில், 20.6 டி.எம்.சி., கன்னியாகுமரி பேச்சிப்பாறை அணையில் 3.62, ஈரோடு பவானிசாகரில் 3.49 டி.எம்.சி., தேனி வைகை அணையில் 3.15 இருப்பு உள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் திருவள்ளூர் மாவட்ட ஏரிகளில், 6.89 டி.எம்.சி.,யும் இருப்பு உள்ளது. இவ்வாறு, 90 அணைகளில், 53 டி.எம்.சி., இருப்பு உள்ளது. இவற்றில், 50 சதவீத அளவிற்கு சேறும் சகதியும் உள்ளது.
கத்திரி வெயில் துவங்குவதற்கு முன்னரே, கடும் வெப்பம் காரணமாக அணைகளில் நீர் இருப்பு குறைந்து வருகிறது. குடிநீர் தேவைகளுக்கு தொடர்ச்சியாக நீர் எடுப்பதும் இதற்கு காரணம்.

