எஸ்.டி.பி.ஐ., - 'மே 17' அமைப்புகளை தடை செய்க: அர்ஜுன் சம்பத் கொதிப்பு
எஸ்.டி.பி.ஐ., - 'மே 17' அமைப்புகளை தடை செய்க: அர்ஜுன் சம்பத் கொதிப்பு
ADDED : நவ 11, 2024 06:40 AM

திருப்பூர் : “எஸ்.டி.பி.ஐ., மற்றும் 'மே 17' இயக்கத்தை அரசு தடை செய்ய வேண்டும்,” என, ஹிந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் கூறினார்.
பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளில் இருந்து விலகியோர், ஹிந்து மக்கள் கட்சியில் இணையும் நிகழ்ச்சி, திருப்பூரில் நேற்று நடந்தது.
இதில் பங்கேற்ற இக்கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியதாவது: ராணுவத்தில் மேஜராக இருந்த முகுந்த் வரதராஜன் என்ற வீரனின் உண்மை சம்பவத்தை வைத்து அமரன் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. அமரன் படம், நாடு முழுதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால், எஸ்.டி.பி.ஐ., மற்றும் மே 17 அமைப்பினர், படம் ஓடக்கூடிய தியேட்டர் முன் ஆர்ப்பாட்டம், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்; இது கண்டிக்கத்தக்கது.
இந்த படம், இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் படம் அல்ல. இஸ்லாமியர்களை தேச பக்தர்களாகத்தான் காட்டி உள்ளனர். ராணுவத்தின் பெருமையை சொல்கிறது. எங்கிருந்தோ வரும் துாண்டுதலின்படி, இந்த அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபடுகின்றன. மக்களுக்கு அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தும் இந்த இரு அமைப்புகளையும் அரசு தடை செய்ய வேண்டும். படத்துக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும்.
பிராமணர்களுக்கு ஆதரவாக ஹிந்து மக்கள் கட்சி நடத்திய பேரணி வெற்றி பெற்றது. தொடர்ந்து, எங்கள் கட்சியை நசுக்க வேண்டும் என்பதற்காக, சிலரின் துாண்டுதல் காரணமாக, கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுப்பது, கூட்டங்களுக்கு தடை விதிப்பது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. முதல்வர் ஸ்டாலினின் நேரடி கவனத்துக்கு இதை எடுத்து செல்ல இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.