'வந்தே பாரத்' ரயில் மீது கல்வீசி தாக்கி அட்டூழியம்
'வந்தே பாரத்' ரயில் மீது கல்வீசி தாக்கி அட்டூழியம்
ADDED : டிச 15, 2025 02:31 AM

விருத்தாசலம்: கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அருகே, 'வந்தே பாரத்' ரயில் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்கினர்.
சென்னை - திருநெல்வேலி செல்லும் வந்தே பாரத் ரயில் நேற்று மாலை, 6:00 மணியளவில், கடலுார் மாவட்டம், விருத்தாசலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன் - தாழநல்லுார் இடையே சென்ற போது, மர்ம நபர்கள் சிலர் ரயில் பெட்டிகளை நோக்கி கற்களை வீசியுள்ளனர். இதில், சி5, சி6, சி7, இ2, சி17 ஆகிய ஐந்து பெட்டிகளில், ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தன.
ரயில், திருச்சி ரயில்வே ஜங்ஷன் சென்றடைந்ததும், ரயில்வே மருத்துவமனை தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் விஜயலட்சுமி சேதமடைந்த பெட்டிகளை பார்வையிட்டார். பயணியருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என, உறுதி செய்தார். ஒவ்வொரு ரயில் பெட்டியில் உள்ள ஜன்னல் கண்ணாடிகள் 6 மி.மீ., மற்றும் 16 மி.மீ., இடைவெளியில் ஆர்கான் - கிரிப்டான் வாயுவால் நிரப்பப்பட்டுள்ளன.
இதனால், கண்ணாடியின் வெளிப்புற அடுக்கில் மட்டுமே சேதமடைந்துள்ளது என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
விருத்தாசலம் ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் விருத்தாசலம் ரயில்வே இருப்பு பாதை போலீசார், மர்ம நபர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

