ADDED : நவ 12, 2025 01:53 AM
எல்லையிலேயே இறக்கி விட்டதால்: பெங்களூரு சென்றவர்கள் அவதி: ஓசூர்: தமிழக எல்லையுடன் ஆம்னி பஸ்கள் நிறுத்தப்பட்டதால், பெங்களூரு சென்ற பயணியர் கடும் அவதியடைந்தனர்.
சமீபத்தில், தமிழகத்திலிருந்து கேரளா சென்ற, 30க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்களுக்கு, அம்மாநில அரசு அபராதம் விதித்தது.
அதேபோல, கர்நாடகா சென்ற, 60க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
ஒவ்வொரு காலாண்டிற்கு ஒருமுறை, மாநிலங்களுக்கு இடையே இயங்கப்படும் ஆம்னி பஸ்களுக்காக, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு, பல லட்சம் ரூபாய் வரி செலுத்த வேண்டியுள்ளது. இதனால், தமிழகத்திலிருந்து கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலத்திற்கு ஆம்னி பஸ்களை இயக்க போவதில்லை என்று முடிவு செய்து, உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதனால், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலிருந்து, கர்நாடகா மாநிலம், பெங்களூரு, மைசூரு, ஹூப்ளி செல்ல வேண்டிய ஆம்னி பஸ்கள், நேற்று காலை முதல், தமிழக எல்லையான ஓசூரில் ஆங்காங்கு நிறுத்தப்பட்டு பயணியர் இறக்கி விடப்பட்டனர்.
இதனால், கடும் அவதியடைந்த பயணியர் அங்கிருந்து மாற்று பஸ்களில் ஏறிச் சென்றனர்.

