வெளிமாநில ஆம்னி பஸ்கள் நிறுத்தம் ரூ.20 கோடி இழப்பு
வெளிமாநில ஆம்னி பஸ்கள் நிறுத்தம் ரூ.20 கோடி இழப்பு
ADDED : நவ 15, 2025 03:26 AM
சென்னை: 'வெளிமாநில ஆம்னி பஸ்கள் நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளதால், 20 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது' என, ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் இருந்து, கடந்த 7ம் தேதி கேரள மாநில எல்லையை அடைந்த தமிழக ஆம்னி பஸ்களுக்கு, அம்மாநில போக்குவரத்து துறை அதிகாரிகள், 70 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர், வெளி மாநிலங்களுக்கு பஸ்கள் இயக்குவதை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பிரச்னைக்கு தீர்வு காண கோரி, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருடன், ஆம்னி பஸ் உரிமையாளர்கள் பேச்சு நடத்தினர். ஆனால், தீர்வு ஏற்படவில்லை. எட்டாம் நாளாக நேற்றும் வெளி மாநிலங்களுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால், ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு, 20 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தினமும் 10,000 பேர் பயணியர் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, தங்களின் பிரச்னையை தீர்க்க, தமிழக அரசு தாமதிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

