தெருநாய்கள் தொல்லை: உள்ளாட்சி நடுவர்மன்றத்தில் தன்னார்வலர்கள் மனு
தெருநாய்கள் தொல்லை: உள்ளாட்சி நடுவர்மன்றத்தில் தன்னார்வலர்கள் மனு
UPDATED : ஜூலை 27, 2025 03:05 AM
ADDED : ஜூலை 26, 2025 08:31 PM

'அதிகரித்து வரும் தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்' என்ற புகாரை முன்வைத்து, உள்ளாட்சி அமைப்புகள் முறை நடுவர் மன்றத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல இடங்களில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. பாதசாரிகள் மற்றும் வாகனங்களில் செல்வோரை விரட்டி கடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன. இதனால், உயிரிழப்பும் நிகழ்கிறது.
'தெரு நாய்களை கருத்தடை அறுவை சிகிச்சை வாயிலாக கட்டுப்படுத்த வேண்டும்' என, உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு தமிழக அரசு வழிகாட்டுதல் வழங்கியது. இருப்பினும், உள்ளாட்சிகளில் இப்பணிகள் முழுவீச்சில் நடப்பதில்லை.
இதற்கிடையில், திருப்பூர் மாவட்டத்தில், தெருநாய் தொல்லை அதிகளவில் காணப்படுகிறது. மனிதர்களை மட்டுமின்றி, ஏராளமான ஆடுகளையும் தெரு நாய்கள் கடிக்கின்றன. நுாற்றுக்கணக்கான ஆடுகள் இறந்தும் உள்ளன. நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் தெரு நாய்களை வளர்க்க தடை இருந்தும், பல இடங்களில் தெருநாய்கள் வளர்க்கப்படுகின்றன.
'தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பத்து ரூபாய் இயக்கத்தின், திருப்பூர் மாவட்ட துணை செயலர் செல்லம், உள்ளாட்சி அமைப்புகள் முறை நடுவர் மன்ற ஆணையத்தில் மனு அளித்துள்ளார். அவர் கூறியதாவது:
மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சிகளில் கவுன்சிலர், தலைவர், மேயர் மற்றும் ஊழியர்கள் மீது கூறப்படும் புகார்களை ஏற்று, அதற்கு தீர்வு காணும் அதிகாரம், முறை நடுவர் மன்ற ஆணையத்துக்கு உண்டு. அந்த வகையில், திருப்பூரில் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என, மாநகராட்சிக்கு கடிதம் வழங்கியும், அந்த கடிதத்துக்கு உரிய விளக்கத்தை அவர்கள் வழங்காததால், உள்ளாட்சி அமைப்புகள் முறை நடுவர் மன்றத்தில் மனு செய்தேன்.
நாய்களால் பொதுமக்களுக்கு இடையூறு அதிகரித்து வருகிறது. எனவே, நாய்களை அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டும். நடவடிக்கை எடுக்காத உள்ளாட்சிகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக பரிந்துரை செய்ய வேண்டும் என, ஆணையத்துக்கு புகார் மனு அனுப்பினேன்.
புகாரை, ஆணையம் ஏற்று, தெருநாய்கள் விவகாரம் தொடர்பாக, மாநகராட்சி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டுள்ளனர். அந்த அடிப்படையில் மாநகராட்சி நிர்வாகமும் விளக்கமளித்துள்ளதாக தெரிகிறது. மனு மீதான விசாரணை விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு, அவர் கூறினார்.
-நமது நிருபர்-

