நொண்டி, கூன், குருடு என பேச்சு: துரைமுருகனுக்கு வலுக்கும் கண்டனம்
நொண்டி, கூன், குருடு என பேச்சு: துரைமுருகனுக்கு வலுக்கும் கண்டனம்
UPDATED : ஏப் 07, 2025 07:05 AM
ADDED : ஏப் 07, 2025 12:47 AM

துாத்துக்குடி: தி.மு.க., பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் துரைமுருகன், மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் வகையில் பேசியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே, இளையரசனேந்தலில் நேற்று முன்தினம் நடந்த தி.மு.க., பொதுக் கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச் செயலரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பேசியதாவது:
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ., அரசு, மக்களுக்கான திட்டங்களையும், நிதியையும் தருவதை விட்டு விட்டு, வேறு பணிகளில் ஈடுபடுகிறது.
ஒவ்வொரு மாநிலமும், அவர்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும். அவர்களுக்கு சலாம் போடுகிறவர், அங்கு முதல்வராக இருக்க வேண்டும். சலாம் போடாதவரை, துாக்கி எறிய வேண்டும் என்பதை அவர்கள் செய்கின்றனர்.
மொழி அழிந்தால், இனம் அழியும் என்பதால், தமிழகத்தில் மொழியை அழித்து, ஹிந்தியை திணிக்கப் பார்க்கின்றனர்.
மொழியை அழிப்பது, பயம் காட்டுவது, பட்டினி போடுவது அவர்கள் திட்டம். அனைத்து நிதியையும் மத்திய அரசு நிறுத்தினாலும், தமிழகத்தில் எங்களால் ஆட்சி நடத்த முடியும்.
தமிழகத்தில் தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் தான் கட்சிகள். மற்றவை எல்லாம் கட்சிகள் இல்லை. அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் ஒரே அணியில் சேரும்.
நொண்டி, கூன், குருடு போன்றவர்களை சேர்த்துக் கொண்டு, தி.மு.க.,வை எதிர்க்கப் பார்க்கின்றனர். அவற்றை எல்லாம் சமாளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஊனமுற்றவர்கள் அனைவரும் மாற்றுத்திறன் படைத்தவர்கள் என்பதால், அவர்களை மாற்றுத்திறனாளிகள் என்றே அழைக்க வேண்டும் என, கருணாநிதி முதல்வராக இருந்தபோது உத்தரவிட்டார்.
ஆனால், அக்கட்சியின் பொதுச்செயலரே, மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் வகையில் பேசியதற்கு, கடும் கண்டனம் எழுந்துள்ளது.