தமிழகத்திற்கான நிதி நிறுத்தம்- மத்திய அரசுக்கு எதிராக வழக்கு: முதல்வர் ஸ்டாலின்
தமிழகத்திற்கான நிதி நிறுத்தம்- மத்திய அரசுக்கு எதிராக வழக்கு: முதல்வர் ஸ்டாலின்
UPDATED : மே 17, 2025 08:39 PM
ADDED : மே 17, 2025 08:34 PM

சென்னை: '' மும்மொழி கல்விக் கொள்கையை ஏற்காததால், தமிழகத்திற்கான நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப் போகிறோம்,' என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
அமைச்சர் அன்பில் மகேஷ் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: அனைவரின் உயர்வு,மேன்மைக்கு அடிப்படை கல்வி தான். ஆளுங்கட்சியோ, எதிர்க்கட்சி வரிசையோ என்றைக்கும் கொள்கையை விட்டுத்தர மாட்டோம். தமிழகத்திற்கான கொள்கைக்கு குரல் கொடுப்போம் .
தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு உருவாக்கிய போது, கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்தார்.தேசிய கல்விக் கொள்கை இட ஒதுக்கீட்டை சிதைத்துவிடும். கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும்.அதற்கான போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும். பாடத்திட்டம் வகுப்பதிலும், கற்க வேண்டிய மொழியை முடிவு செய்வதிலும் மாநில அரசுகளுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
மாநிலபட்டியலுக்கு மாற்றவில்லை என்றால், பலருக்கும் கல்வி எட்டாக்கனியாக மாறிவிடும். தடுப்புச்சுவர்களை எழுப்பி எழுப்பி பலரையும் பாதி தூரத்தில் நிறுத்தி கல்விச் சாலைக்கு வெளியே நிறுத்திவிடுகின்றனர்.
மும்மொழி கொள்கையை ஏற்கவில்லை என்பதால் மத்திய அரசு தர வேண்டிய நிதியை மறுப்பது அனைவருக்கும் தெரியும். பார்லி குழு பரிந்துரை செய்த நிதி தான் அது. குழந்தைகள், ஆசிரியர்களுக்கு கொடுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டிலும் தமிழக அரசு வழக்கு தொடரத்தான் போகிறது. இந்த வழக்கிலும் வெற்றி பெறுவோம் என நம்புகிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.