மாணவியருக்கான தற்காப்பு கலை திட்டம் அரசு நிதி தராததால் முடங்கும் அபாயம்
மாணவியருக்கான தற்காப்பு கலை திட்டம் அரசு நிதி தராததால் முடங்கும் அபாயம்
ADDED : பிப் 08, 2025 09:29 PM
மதுரை:அரசு பள்ளி மாணவியருக்கான தற்காப்பு கலை திட்டத்திற்கு, இந்தாண்டு தமிழக அரசு நிதி ஒதுக்காததால், திட்டம் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
பெண்கள் மீதான வன்முறையை தடுக்கவும், மாணவியருக்கு தன்னம்பிக்கை அளிக்கவும், தமிழக அரசால் தற்காப்பு கலையை கற்றுத்தரும் திட்டம் துவக்கப்பட்டது.
இதன்படி, அரசு பள்ளிகளில் ஆறு முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவியருக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் மார்ச் வரை, சிலம்பம், கராத்தே, ஜூடோ, டேக்வாண்டோ போன்ற தற்காப்பு கலைகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.
இதற்காக, பள்ளிகளில் நியமிக்கப்படும் பயிற்சியாளர்கள் சம்பளம், மாணவியருக்கு சிற்றுண்டி செலவுக்காக, பள்ளிகளுக்கு தலா, 9,000 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பரில் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கப்படும்.
அப்போது தான், ஜனவரி முதல் பயிற்சிகள் அளிக்க ஏற்பாடு செய்ய முடியும். ஆனால், இந்நிதியை இந்தாண்டிற்கு இதுவரை ஒதுக்கவில்லை. அதனால், பயிற்சியாளர்களுக்கு சம்பளம் தர முடியாமல், அனைத்து பள்ளிகளிலும் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் கூறியதாவது:
கிருஷ்ணகிரி, திருச்சி மாவட்ட சம்பவங்கள் உட்பட தற்போது பள்ளி மாணவியர் மீதான பாலியல் தொல்லை சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இதனால், பெற்றோர் கவலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மாணவியருக்கான தற்காப்பு கலை திட்டத்திற்கு ஆதரவு இருந்தது.
பென்சில், பேனாக்களை கொண்டு கூட எவ்வாறு தற்காத்துக் கொள்ள முடியும் என, மாணவியருக்கான பயிற்சி பயனுள்ளதாக இருந்தது.
ஆனால், இத்திட்டத்திற்கான நிதியை நிறுத்தி வைத்துள்ளது மாணவியர், பெற்றோரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.