ரயிலில் அடிபட்டு மாணவர் பலி நீண்ட நேரம் ஆம்புலன்ஸ் வராத அவலம்
ரயிலில் அடிபட்டு மாணவர் பலி நீண்ட நேரம் ஆம்புலன்ஸ் வராத அவலம்
ADDED : அக் 29, 2026 11:09 PM
சேலம்: சேலம், பொன்னம்மாபேட்டை அடுத்து, தனியார் கல்லுாரி அருகே, இன்று (அக்.,29) காலை, 10:30 மணிக்கு, தண்டவாளத்தை கடக்க ஒரு மாணவர் முயன்றார். அப்போது சேலம் – விருத்தாச்சலம் ரயிலில் அடிபட்டு, சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
இதுகுறித்து, 11:00 மணிக்கு கிடைத்த தகவல்படி, சேலம் ரயில்வே போலீசார், அங்கு சென்று, ‘108’ அவசரகால ஆம்புலன்ஸூக்கு தகவல் தெரிவித்தனர். ஒன்றரை மணி நேரமாகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை. போலீசார் விசாரித்தபோது, உடல் எடுத்துச்செல்வதற்கான வாகனம், அந்த நேரத்தில் இல்லாதது தெரியவந்தது.
பின் மக்கள் உதவியுடன், உடல் துணியால் கட்டப்பட்டு, சாலை பகுதிக்கு எடுத்து வந்தனர். இதையடுத்து, தனியார் கல்லுாரி நிர்வாகம் ஏற்பாடு செய்த ஆம்புலன்ஸில், உடல் ஏற்றப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
விசாரணை குறித்து, போலீசார் கூறியதாவது:
இறந்தவர், பெரம்பலுார் மாவட்டம் மங்களமேடை சேர்ந்த திவாகர், 21. சேலத்தில் விடுதியில் தங்கி, தனியார் கல்லுாரியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பிரிவு, 2ம் ஆண்டு படித்தார். காதில், ‘ஏர்பாட்ஸ்’ பயன்படுத்தினாரா, அதனால் ரயில் வரும் சத்தம் தெரியாமல், தண்டவாளத்தை கடந்தாரா என விசாரணை நடக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
