பாதுகாப்பாக பட்டாசு வெடிக்கும்படி மாணவர்களுக்கு அறிவுறுத்த உத்தரவு
பாதுகாப்பாக பட்டாசு வெடிக்கும்படி மாணவர்களுக்கு அறிவுறுத்த உத்தரவு
ADDED : அக் 11, 2025 07:36 PM
சென்னை:'பட்டாசு வெடிக்கும் போது கவனமாக செயல்படும்படி மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்' என, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
வரும் 20ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பள்ளி மாணவ, மாணவி யர், பட்டாசு வெடிப்பதில் ஆர்வமாக இருப்பர். அவர்கள் பாதுகாப்புடன், பட்டாசு வெடிக்க, ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டியது அவசியம்.
பட்டாசு வெடிக்கும்போது, அருகில் ஒரு வாளியில் தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும்.
தளர்வான மற்றும் டெரிகாட்டன், டெரிலின் உள்ளிட்ட, எளிதில் தீப்பற்றும் ஆடைகளை அணியக்கூடாது. கையிலோ, உடல் அருகிலோ, பட்டாசை வெடிக்காமல், நீண்ட ஊதுவர்த்தி வாயிலாக வெடிக்க வேண்டும்.
மூடிய பெட்டிகள், பாட்டில்களில், வெடிகளை வைத்து வெடிக்க கூடாது. குடிசைகள், கீற்று கொட்டகை, வாகன போக்குவரத்து அதிகம் உள்ள நெரிசலான இடங்கள், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் சேமிப்பு இடங்கள், மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள் , குழந்தைகள் உள்ள இடங்களில் வெடிகளை வெடிக்க கூடாது.
வெடிக்கு அருகில் குனிந்து வெடிக்கும் போது, பார்வைத்திறன் பாதிக்கும். அதனால், அவ்வாறு ஆபத்தான வகையில் வெடிகளை வெடிக்க கூடாது. பெற்றோர் அல்லது பெரியவர்கள் துணையுடன் வெடி வெடிக்க வேண்டும் என, மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.