சமூக வலைதளங்களால் மாணவர்களுக்கு அழுத்தம்: 'ஜெம்' மருத்துவமனை தலைவர் பழனிவேலு பேச்சு
சமூக வலைதளங்களால் மாணவர்களுக்கு அழுத்தம்: 'ஜெம்' மருத்துவமனை தலைவர் பழனிவேலு பேச்சு
ADDED : பிப் 17, 2025 05:22 AM

சென்னை: ''சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், அதன் அழுத்தம் பள்ளி மாணவர்களை பாதிக்கிறது,'' என, 'ஜெம்' மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சி. பழனிவேலு தெரிவித்தார்.
இவரது சுயசரிதை புத்தகம், ஆங்கிலத்தில், 'கட்ஸ்' என்ற தலைப்பிலும், 'எதுவுமின்றி' என்ற தலைப்பில் தமிழிலும், கடந்த ஆண்டு ஜூலையில் கோவையில் வெளியிடப்பட்டது.
புத்தகத்தின் அறிமுக விழா நேற்று சென்னைகிண்டியில் நடந்தது. விழாவில், பழனிவேலு பேசியதாவது:
சுயசரிதை எழுத வேண்டும் என்ற எண்ணம் வர, சில காரணங்கள் அடிப்படையாக அமைந்தன. நம் நாட்டில் கிராமப்புறங்களில் இருந்து வரும் பெரும்பாலான நோயாளிகள், நோய் முற்றிய நிலையிலேயே, பெரிய மருத்துவமனைகளை நாடுகின்றனர். இதனால், அவர்களில் பலருக்கு சிகிச்சையில், நோயை சரி செய்ய முடியாமல் போகிறது.
இதற்கு, அவர்கள் வசிக்கும் கிராமத்து சூழல் மற்றும் விழிப்புணர்வு இல்லாததே முக்கிய காரணம். மருத்துவ சிகிச்சைக்கு சென்றால், அதிக நாட்களாகும். அதுவரை தங்களது வழக்கமான வேலைகள் பாதிக்கும் என்று நினைக்கின்றனர்.
மிகக்குறைந்த நாட்களில் சிகிச்சை முடிந்து திரும்பும் அளவிற்கு முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதை, அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். அதன் அடிப்படையில், இந்த புத்தகத்தை எழுத வேண்டிய நிலை ஏற்பட்டது.
நம் நாட்டில் மாணவர்கள் அடுத்தடுத்து முன்னேற வேண்டும் என்ற ரீதியில், பல்வேறு படிப்புகளை தேடிப்பிடித்து படிக்கின்றனர். அதிகமாக படிக்கிறோம் என்பதை விட, தன்னம்பிக்கையுடன் படித்தால் மட்டுமே உயர்ந்த இடத்தை அடைய முடியும்.
சமீப காலமாக அதிகரித்துள்ள, சமூக வலைதளங்களின் பயன்பாடு, அதனால் ஏற்படும் அழுத்தம், பள்ளி மாணவர்களை கடுமையாக பாதிக்கிறது.
அவர்களுக்கும், அவர்கள் குறித்து மற்றவர்களுக்கும் தவறான எண்ணங்கள் ஏற்பட, இது காரணமாக அமைந்துள்ளது. நான் பள்ளி கல்வியை பெற, பல்வேறு ஆசிரியர்கள் உதவினர்.
மாணவர்கள் நல்ல முறையில் நடந்து கொண்டால், அவர்கள் மீது ஆசிரியர்களுக்கு நம்பிக்கை ஏற்படும். அவர்கள் மாணவர்களுக்காக பெரு முயற்சி எடுத்து பாடுபடுவர். அகில இந்திய அளவில், அறுவை சிகிச்சை நிபுணர்கள் மாநாட்டில், நான் உட்பட, 13 பேரின் வாழ்க்கை வரலாறு குறிப்பு வெளியிடப்பட்டது. அது பலரின் கவனத்தை கவர்ந்ததுடன், மற்றவர்களின் பார்வையை என் பக்கம் திருப்பியது.
அதன்பின், பி.சி.ராய் விருது வாங்கும் போது, என் வாழ்க்கை வரலாற்றை, அப்போது ஜனாதிபதியாக இருந்த அப்துல்கலாம் கேட்டறிந்தார்.
அவர், பள்ளி மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில், உங்கள் வாழ்க்கை வரலாறை எழுதுங்கள் என்றார். அதன்பின் பல்வேறு நிகழ்வுகளிலும், அவர் தொடர்ந்து வலியுறுத்தினார்.
அதன் அடிப்படையில், சுயசரிதையை எழுதி இருக்கிறேன். இதன், 6,000 பிரதிகளை, அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்க இருக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் மெட்ராஸ் இ.என்.டி., பவுண்டேஷன் நிர்வாக இயக்குனர் மோகன் காமேஸ்வரன், லேப்ராஸ்கோபிக் வல்லுனர் லட்சுமிகாந்த், வழக்கறிஞர் ஸ்டாலின் பாஸ்கர், பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், 'ஜெம்' மருத்துவமனை இயக்குனர்கள் அசோகன், செந்தில்நாதன் ஆகியோர் பங்கேற்றனர்.