UPDATED : ஏப் 03, 2024 06:06 AM
ADDED : ஏப் 03, 2024 02:30 AM

எஸ்.சின்னராசு டேவிட், தென்காசியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
திராவிட மாடலின், 'கடவுள்' ஆன, ஈ.வெ.ரா., தன்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்பவர்களிடம், 10 ரூபாய் வாங்கி கொண்டு தான், படம் பிடிக்க அனுமதிப்பார்.
சென்னையில், அண்ணாசாலை, அண்ணாசிலைக்கு அருகில், பிளாட்பார ஜோதிடர்கள், பிரபலமானவர்களுக்கு கை ரேகை பார்த்து சொன்னது போல புகைப்படம் எடுத்து, வரிசையாக அடுக்கி வைத்திருப்பர்.
நிற்க...
'பா.ஜ.,வுடனும், பிரதமரோடும் கள்ளக் கூட்டணி வைத்திருப்பவர் ஸ்டாலின் தான். பதவி வெறி பிடித்த கட்சி அல்ல அ.தி.மு.க., நாங்கள் யாருக்கு மறைமுக ஆதரவு செலுத்த வேண்டிய அவசியம் இல்லை' என, துாத்துக்குடி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதரித்து, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிச்சாமி பரப்புரை நிகழ்த்தி இருக்கிறார்.
அன்னாரது அந்த பரப்புரையை படித்தபோது, 'இவரெல்லாம் எப்படி முதலமைச்சர் இருக்கையில் அமர்ந்து நிர்வாகம் நடத்தினார்... இவர் முட்டாளா, முழு ஆளா?' என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க இயலவில்லை.
ஏனெனில், பிரதமர் மோடியும், முதல்வர் ஸ்டாலினும் இருப்பது போன்றதொரு புகைப்படத்தை காட்டி இருக்கிறார்.
இப்போது இக்கடிதத்தின் முதலில் குறிப்பிட்டுள்ளவற்றை சற்று வாசித்து பாருங்கள்.
பிரபலமானவர்கள் அருகில் நின்று புகைப்படம் எடுத்து கொள்வது, சாதாரணமான விஷயம் தான்.
அதிலும் பிரதமரும், முதல்வரும் அருகருகே இருந்தபடி புகைப்படம் எடுப்பதும், சர்வ சாதாரணமான விஷயம் தான்.
இதே பழனிச்சாமி முதல்வராக கோலோச்சியபோது, இதே பிரதமருடன் ஆயிரக்கணக்கான புகைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கலாம்.
நாளை அல்லது அதற்கு மறுநாள், தி.மு.க., பிரசார மேடைகளில், பிரதமரும், பழனிச்சாமியும் இருப்பது போன்ற புகைப்படத்தை காட்டி, வழக்கமாக வழங்கும், 'அர்ச்சனை' சொற்களை, ஸ்டாலின் பொழிந்தாரானால், பழனிச்சாமியால் ஏற்றுக் கொள்ள முடியுமா?
மீண்டும் அதே கேள்வி... மூவன்னாவா, மு.ஆவன்னாவா?

