ADDED : செப் 12, 2026 03:51 AM
சென்னை: தமிழக வேளாண் பொறியியல் துறை சார்பில் வழங்கப்படும் வேளாண் கருவிகளை, மானிய விலையில் பெற, விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
வேளாண் இயந்திரமயமாக்கும் துணை இயக்க திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு, மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கப்படுகின்றன.
அதாவது, டிராக்டர்கள், பவர் டில்லர்கள், நெல் நாற்று, நடவு இயந்திரங்கள், விசைத் தெளிப்பான்கள், பவர் வீடர், தட்டு இயந்திரம், வைக்கோல் கட்டும் இயந்திரம் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. அதில், பெண் விவசாயிகளுக்கு, முன்னுரிமை வழங்கப்படுகிறது.
பொதுப்பிரிவைச் சேர்ந்த, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு, கருவிகளின் மதிப்பில், 50 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது. பவர் வீடர், நெல் நாற்று நடவு இயந்திரம் மற்றும் தட்டு வெட்டும் இயந்திரங்களுக்கு, கூடுதலாக 10 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.
எஸ்.சி., -- எஸ்.டி., பிரிவினருக்கு, வழக்கமாக வழங்கப்படும் 50 சதவீத மானியத்துடன், சில கருவிகளுக்கு கூடுதலாக 20 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.
இந்த மானிய கருவிகளை பெற, விவசாயிகள் தன் புகைப்படம், நிலத்துக்கான பட்டா, சிட்டா, வங்கிக்கணக்கு புத்தகம், ஆதார் அட்டை நகல், சிறு, குறு விவசாயி சான்றிதழ், ஜாதிச்சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களுடன், 'https://mts.aed.tn.gov.in' இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
மேலும் விபரங்களுக்கு, அந்தந்த மாவட்டத்தில் உள்ள, வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அல்லது வட்டார வேளாண்மை அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.
