அவகோடா, டிராகன் பழங்கள் உற்பத்தியை பெருக்க மானியம்
அவகோடா, டிராகன் பழங்கள் உற்பத்தியை பெருக்க மானியம்
ADDED : ஆக 13, 2024 07:07 AM

சென்னை: அவகோடா மற்றும் டிராகன் பழங்கள் உற்பத்தியை அதிகரிப்பதற்கான பணிகளை, தோட்டக்கலை துறை துவக்கியுள்ளது.
அவகோடா மற்றும் டிராகன் பழங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவற்றை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு, அதிகளவில் வருவாய் கிடைத்து வருகிறது. அதேநேரத்தில், நுகர்வோர் பயன்படுத்தும் அளவிற்கு விலை கட்டுப்படியாகாமல் உள்ளது. ஒரு கிலோ டிராகன் பழம், 250 ரூபாய்க்கும், அவகோடா, 300 முதல் 400 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
இவற்றின் உற்பத்தியை அதிகரிப்பதால், விவசாயிகளுக்கு ஆண்டு முழுதும் வருமானம் மட்டுமின்றி, நுகர்வோர்களுக்கு மலிவான விலையிலும் பழங்கள் கிடைக்கும். இதை கருத்தில் கொண்டு, இவற்றின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான பணிகளை, தோட்டக்கலை துறை துவங்கியுள்ளது.
தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டங்களின் கீழ், சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. 60 சதவீத நிதியை மத்திய அரசும், 40 சதவீத நிதியை மாநில அரசும் பகிர்ந்து கொள்கின்றன.
அவகோடா சாகுபடிக்கு ஏக்கருக்கு 5,760 ரூபாயும், டிராகன் பழங்கள் சாகுபடிக்கு 38,400 ரூபாயும் விவசாயிகளுக்கு மானியமாக கிடைக்கும். இதற்கான பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாக, தோட்டக்கலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

