அடுத்தடுத்து அழைப்பிதழ் மாற்றம் மோடி நிகழ்ச்சியில் குழப்பம் ஏன்?
அடுத்தடுத்து அழைப்பிதழ் மாற்றம் மோடி நிகழ்ச்சியில் குழப்பம் ஏன்?
ADDED : மார் 01, 2024 12:10 AM
துாத்துக்குடியில் நடந்த தென் மாவட்டங்களின் வளர்ச்சி பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில், பிரதமர் மோடியுடன் பங்கேற்பதை, முதல்வர் ஸ்டாலினும், அமைச்சர்களும் வேண்டுமென்றே தவிர்த்த விவகாரமும்; நெல்லை பா.ஜ., பொதுக் கூட்டத்தில், 'தமிழகத்தில் தி.மு.க.,வே இனி இருக்காது' என்ற பிரதமரின் ஆவேச பேச்சும், தேர்தல் களத்தில் விவாதப் பொருளாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
துாத்துக்குடி துறைமுக திட்டப் பணிகள், குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் உட்பட, 17,000 கோடி ரூபாய் மதிப்பில், 18 திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
இதற்கான விழாவில் பங்கேற்க ஒப்புதல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, விழா அழைப்பிதழில் முதல்வர் பெயரும், துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் பெயர்களும், தொகுதி எம்.பி., கனிமொழி பெயரும் இடம் பெற்றன.
அழைப்பிதழ் மாற்றம்
தேர்தல் நேரத்தில் மோடியுடன் மேடையில் தோன்றினால், 'இண்டியா' கூட்டணி தலைவர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும் என்பதால், அவ்விழாவில் பங்கேற்பதை முதல்வர் விரும்பவில்லை என தெரியவந்தது.
அதையடுத்து, விழா அழைப்பிதழ் மாற்றப்பட்டு, முதல்வர் பெயர் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக மூத்த அமைச்சர் வேலு பெயர் சேர்க்கப்பட்டது.
வேறு எந்த மாற்றமும் இன்றி, அழைப்பிதழ் வினியோகம் துவங்கும் நேரத்தில், மீண்டும் திருத்தங்கள் செய்யப்பட்டு, அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் பெயர்கள் நீக்கப்பட்டன. தி.மு.க., சார்பில் அமைச்சர் வேலு, கனிமொழி பெயர்கள் மட்டுமே இருந்தன.
இதற்கிடையில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றால், அவரை வாழ்த்தி கோஷம் எழுப்பும் ஏற்பாடாக, 2,000 தொண்டர்களை வழிநெடுக நிற்க வைக்க, மாவட்ட அமைச்சர்கள் திட்டமிட்டிருந்தனர்.
ஸ்டாலின் வராமல் தவிர்த்ததால், அதையெல்லாம் ரத்து செய்து விட்டு, துாத்துக்குடி வந்த பிரதமர் மோடியை வரவேற்கும் நிகழ்ச்சிக்கு மட்டுமே மாவட்ட அமைச்சர்கள் இருவரும் சென்றனர்; பிரதமர் விழாவுக்கு செல்லாமல் வீட்டுக்கு போய் விட்டனர்.
அமைச்சர் வேலுவும், கனிமொழியும் பங்கேற்ற போதிலும், பிரதமர் தன் பேச்சில், அவர்கள் இருவரின் பெயரை சொல்லாமல், பதவிகளை மட்டும் குறிப்பிட்டு, அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
சேவை தொடரும்
இதுபோன்ற குளறுபடிகள் திட்டமிட்டே தி.மு.க.,வால் செய்யப்படுவதாக கருதிய பிரதமர், தன் பேச்சில் அதை சுட்டிக்காட்டினார். 'வளர்ச்சிப் பணிகளுக்கான மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு தடுத்தாலும், எங்கள் சேவை தொடரும்' என, குத்திக் காட்டினார்.
துாத்துக்குடியை தொடர்ந்து, திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் நடந்த பா.ஜ., பொதுக்கூட்டத்தில் பிரதமர் பேசினார்.
அவரது பேச்சில், வழக்கத்தை விட அதிக கோபமும், ஆவேசமும் இருந்தது. தி.மு.க.,வை பற்றியும், அதன் தலைமையிலான மாநில அரசு பற்றியும் பேசுகையில், அவர் பயன்படுத்திய வார்த்தைகள் சூடாக இருந்தன. அவரது முகத்திலும், உடல் மொழியிலும் அது தெரிந்தது.
'தமிழகத்தில் தி.மு.க., குடும்ப ஆட்சி நடத்துகிறது. அடுத்த முதல்வர் யார் எனக் கேட்டால், நான், என் மகன் என்கின்றனர். வாரிசு அரசியலை நடத்தும் தி.மு.க.,வை தமிழகத்தில் இனிமேல் பார்க்க முடியாது. தமிழகத்தில் இனி தி.மு.க.,வே இருக்காது' என, எப்போதுமே இல்லாத வகையில் அமைந்தது, பிரதமரின் பேச்சு.
துாத்துக்குடி புறக்கணிப்புக்கு, நெல்லையில் மோடி காட்டிய ஆவேசம், அவரது கட்சியினரிடம் உணர்ச்சி பிரவாகத்தையும், ஆளும் தி.மு.க.,வில் அதிர்ச்சி அனலையும் ஏற்படுத்தி உள்ளது.
- நமது நிருபர் -

