தமிழகத்தில் ஆகாயத்தை தொடுது அரிசி விலை: பொது மக்கள் அதிர்ச்சி
தமிழகத்தில் ஆகாயத்தை தொடுது அரிசி விலை: பொது மக்கள் அதிர்ச்சி
ADDED : ஜன 31, 2024 05:21 PM

சென்னை: தமிழகத்தில் அரிசி விலை கிலோவுக்கு ரூ.10 வரை உயர்ந்துள்ளது, சாமானிய மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. வெளிமாநில வியாபாரிகள், டெல்டா மாவட்டங்களில் அதிகளவில் வாங்கி செல்வதே இதற்கு காரணம் என தெரிகிறது.
தமிழகத்தில் காய்கறிகள், பூண்டு உள்ளிட்டவற்றின் விலை அதிகரித்து வந்த நிலையில், அத்தியாவசிய உணவுப்பொருளான அரிசி விலையும் அதிகரித்து வருகிறது. கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.15 வரை விலை உயர்ந்து மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சென்னையில் 25 கிலோ எடை கொண்ட அரிசி மூட்டையின் விலை ரூ.100 வரை அதிகரித்துள்ளதாக வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்டை மாநிலங்களில் இருந்து நெல் வரத்து குறைவு மற்றும் ஆந்திரா, கர்நாடகா மாநில வியாபாரிகள், டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களிலும் போட்டி போட்டுக் கொண்டு நெல் மற்றும் அரிசியை வாங்கி செல்வதால் விலை உயர்ந்து காணப்படுவதாக அரிசி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் பாதிப்பு, அறுவடை நேரத்தில் பலத்த காற்று வீசியது மற்றும் தென் மாவட்டங்களை புரட்டிப்போட்ட கனமழை காரணமாக நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதுவும் அரிசி விலை உயர ஒரு காரணம் எனவும் அரிசி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.