ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு
ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு
ADDED : நவ 23, 2025 01:41 AM
சென்னை: ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில், நேற்று திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், 20 நிமிடங்கள் வரை, சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.
மக்களிடம் மொபைல் போன், கணினி பயன்பாடு அதிகரித்த நிலையில், இணையதளம், செயலி வழியாக, ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது அதிகரித்து வருகிறது.
தற்போதுள்ள நிலவரப்படி, 89 சதவீதத்துக்கும் மேற்பட்டோர், ஐ.ஆர்.சி.டி.சி., இணைய தளத்தில், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். எனினும், 'சர்வர்' தரம் உயர்த்தாமல் இருப்பதால், இணையதளத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவது வழக்கமாக இருக்கிறது.
நேற்று காலை 11:00 மணி முதல் 11:20 மணி வரை, தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு, டிக்கெட் முன்பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இதனால், ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் வாயிலாக, டிக்கெட் எடுக்க முடியாமல், பெரும்பாலானோர் அவதிக்குள்ளாகினர்.
இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில் நேற்று பெரும்பாலான இடங்களில், பெரிய அளவில் பாதிப்பு இல்லை. சில இடங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு, சில நிமிடங்களுக்கு மட்டும் பாதிப்பு இருந்தது. அதன்பின் சரியாகி விட்டது' என்றனர்.

