தலைமை செயலகத்தில் திடீர் அதிர்வு... பதற்றத்துடன் வெளியேறிய ஊழியர்கள்; சென்னையில் பரபரப்பு!
தலைமை செயலகத்தில் திடீர் அதிர்வு... பதற்றத்துடன் வெளியேறிய ஊழியர்கள்; சென்னையில் பரபரப்பு!
ADDED : அக் 24, 2024 12:13 PM

சென்னை: சென்னை தலைமைச் செயலக கட்டிடத்தில் திடீரென அதிர்வு உணரப்பட்டதால், ஊழியர்கள் பதற்றத்துடன் வெளியேறினர்.
சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழக அரசின் தலைமைச் செயலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தான் தமிழக அரசின் அனைத்து துறைகளும் செயல்பட்டு வருகின்றன.
தலைமை செயலகத்தின் ஒரு பகுதியாக உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் பல்வேறு துறைகளின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தலைமை செயலகத்தில் பணியில் இருந்த ஊழியர்கள் பலர், இன்று காலை திடீரென ஒரு அதிர்வை உணர்ந்தனர். அதே நேரத்தில் முதல் தளத்தில் உள்ள தரையில் இருக்கும் டைல்ஸில் சத்ததுடன் விரிசல் ஏற்பட்டுள்ளது.
பீதியடைந்த ஊழியர்கள், நாமக்கல் கவிஞர் மாளிகையில் இருந்து ஒட்டுமொத்தமாக வெளியேறினர். இதனால், பரபரப்பு நிலவியது.
இதனிடையே, இது சாதாரண விரிசல் தான் என்றும், ஊழியர்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் போலீசார் விளக்கம் அளித்தனர். சேதம் அடைந்த பகுதிகளை, அதிகாரிகளும் அமைச்சர் எ.வ.வேலுவும் நேரில் ஆய்வு செய்தனர்.
அப்போது, அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது: 14 ஆண்டுக்கு முன் போடப்பட்ட டைல்ஸ். அப்போது எல்லாம் சிறு சிறு வடிவங்களில் தான் டைல்ஸ் தயாரிக்கப்படும். இது சாதாரண ஏர் கிராக் தான். கட்டிடத்தில் விரிசல் ஏதும் இல்லை. பொறியாளர்களுடன் ஆய்வு செய்ததில், கட்டிடம் உறுதித் தன்மையுடன் உள்ளது. இருந்தாலும், ஏர் கிராக் இருக்கும் பகுதிகளில் பழைய டைல்ஸ்களை நீக்கி விட்டு, புதிய டைல்ஸ்களை போட ஆணையிட்டுள்ளேன். எனவே, அச்சப்பட வேண்டாம், எனக் கூறினார்.