துாய்மை பணியாளர்களுக்கு முதல்வர் டீ , பிஸ்கட் சப்ளை
துாய்மை பணியாளர்களுக்கு முதல்வர் டீ , பிஸ்கட் சப்ளை
ADDED : அக் 16, 2024 01:13 AM

சென்னை:'துாய்மை பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுடன், நானும் எப்போதும் முன்கள வீரனாகத் துணை நிற்பேன்' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். புளியந்தோப்பு பகுதியில், மழைநீர் அகற்றும் பணியில், மும்முரமாக ஈடுபட்டிருந்த முன்களப் பணியாளர்களை பாராட்டினார்.
அவர்களை அருகில் இருந்த டீக்கடைக்கு அழைத்துச் சென்றார். அவர்களுக்கு, 'டீ மற்றும் பிஸ்கட்' வாங்கிக் கொடுத்து உற்சாகம் அளித்தார். அவருக்கு பணியாளர்கள் நன்றி தெரிவித்தனர்.
முதல்வர் அளித்த ஊக்கம், தங்களை மேலும் பணியில் ஆர்வமுடன் செயல்பட வழிவகுக்கும் என்றனர்.
துாய்மை பணியாளர்களுடன், 'டீ' குடிக்கும் படத்தை, முதல்வர் தன், 'எக்ஸ்' வலைதளத்தில் வெளியிட்டு, 'கொட்டும் மழை உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ள தன்னலம் கருதாமல், நேரம் காலம் பார்க்காமல், நம் துயர் துடைக்க களம் காண்பவர்கள், துாய்மை பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள். அவர்களுடன் நானும் எப்போதும் முன்கள வீரனாகத் துணை நிற்பேன்' என்று கூறியுள்ளார்.