தி.மு.க.,வுக்கு ஆதரவா? தலித் கிறிஸ்தவர்கள் கண்டனம்
தி.மு.க.,வுக்கு ஆதரவா? தலித் கிறிஸ்தவர்கள் கண்டனம்
ADDED : ஏப் 15, 2026 06:38 AM

தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவளித்த தமிழக ஆயர் பேரவைக்கு, தலித் கிறிஸ்தவ ஆசிரியர், அலுவலர் நலச்சங்கத் தலைவர் ஜான் பிரிட்டோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு என்ற, தமிழக ஆயர் பேரவையின் முடிவு கண்டனத்திற்குரியது. இந்த முடிவை, தலித் கிறிஸ்தவர்களால் ஏற்க முடியாது.
அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 'மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கு, மதத்தின் பெயரால் மறுக்கப்பட்ட அனைத்து உரிமைகளும் சலுகைகளும் கிடைக்க, மத்திய அரசை வலியுறுத்துவோம்' என கூறப்பட்டுள்ளது. தி.மு.க., கூட்டணியில், இதுபோன்ற வாக்குறுதிகள் தரப்படவில்லை.
இந்திய பட்டியலினத்தவருக்கு ஒரு பிரச்னை என்றால், ஆர்.எஸ்.எஸ்., போன்ற அமைப்புகள் குரல் கொடுக்கின்றன. ஆனால், பட்டியலின கிறிஸ்தவர்களுக்கு ஒரு பிரச்னை என்றால், அவர்களை கிறிஸ்தவராக பார்க்காமல் தலித்தாக பார்த்து, திருச்சபை நிர்வாகம் பாராமுகமாக இருக்கிறது.
கிறிஸ்தவர்களுக்கு எதிரான கட்சி பா.ஜ., என்று ஆயர் பேரவை கருதினால், அக்கட்சி போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் எதிர்க்கலாம். மற்ற தொகுதிகளில் சுதந்திரத்தோடு ஓட்டு போடுங்கள் என்று சொல்வது தான், நியாயமாக இருக்கும். இதை சொல்ல தடையாக இருப்பது எது என்பதை, ஆயர் பேரவை தெரிவிக்க வேண்டும்.
தேர்தலுக்குப் பின், எந்த சூழ்நிலையிலும் த.வெ.க., தலைவர் விஜயை ஆதரிக்க மாட்டோம் என, ஆயர் பேரவையால் உறுதியாக கூற முடியுமா?
தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவர்களில் பெரும்பான்மையினரான பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள், தி.மு.க.,வை ஆதரிக்கும் முடிவை ஏற்க மாட்டார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
