சுப்ரீம் கோர்ட் உத்தரவால் தெரு நாய்களை கட்டுப்படுத்துவதில் சிக்கல்: அமைச்சர் நேரு
சுப்ரீம் கோர்ட் உத்தரவால் தெரு நாய்களை கட்டுப்படுத்துவதில் சிக்கல்: அமைச்சர் நேரு
ADDED : மார் 18, 2025 07:26 AM

சென்னை: சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்:
கொ.ம.தே.க., - ஈஸ்வரன்: ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில், தெருநாய்களின் தொந்தரவு அதிகரித்துள்ளது. தெருநாய்கள், ஆடு, கோழிகளை கடிப்பதால், விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. இதற்கு, அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.
அமைச்சர் நேரு: இது தீர்க்க முடியாத பிரச்னை. தெருநாய்களை பிடித்தால், கருத்தடை செய்து மீண்டும் அதே இடத்தில் விட வேண்டும்.
அப்படி விடும் நாய்கள் உயிரோடு இருக்க வேண்டும். இல்லையென்றால், சிறை தண்டனை வழங்கப்படும் என, உச்ச நீதிமன்ற உத்தரவு உள்ளது. இதனால், தெரு நாய்களை பிடிக்க, அதிகாரிகள் பயப்படுகின்றனர்.
இப்பிரச்னைக்கு தீர்வு காண, பார்லிமென்டில் தனிநபர் தீர்மானம் கொண்டு வருமாறு, தி.மு.க., - எம்.பி.,க்களிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். சட்டத்தில் இடமில்லை. இல்லையெனில், ஒரே நாளில் இப்பிரச்னையை முடிக்க முடியும்.
அமைச்சர் முத்துசாமி: தெருநாய்களால் கோழி, ஆடுகளை இழக்கும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து, முதல்வரிடம் பேசி முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.