நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக அவதுாறு கருத்து: தமிழக அரசு, டி.ஜி.பி.,க்கு சுப்ரீம் கோர்ட் கிடுக்கி
நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக அவதுாறு கருத்து: தமிழக அரசு, டி.ஜி.பி.,க்கு சுப்ரீம் கோர்ட் கிடுக்கி
ADDED : ஜன 29, 2026 05:08 AM

மதுரை திருப்பரங்குன்றம் மலையில் 'கார்த்திகை தீபம்' ஏற்ற அனுமதி அளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக, அவதுாறு கருத்துகளை பரப்பிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் முருகபெருமானின் அறுபடை வீடுகளில், முதல் படை வீடான திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில், கடந்த கார்த்திகை தீபத்தன்று விளக்கு ஏற்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். இதனால், ஆவேசமடைந்த தி.மு.க., - காங்., - சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய, 'இண்டி' கூட்டணி, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மத ரீதியாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டி அவரை பதவி நீக்கம் செய்யக் கோரி சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் நோட்டீஸ் அளித்தது.
இந்தச் சூழலில், நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக, ஜாதி மற்றும் மத ரீதியில் அவதுாறு கருத்துகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பா.ஜ.,வை சேர்ந்த வழக்கறிஞர் மணி உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் வரலே அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுவை ஆராய்ந்த நீதிபதிகள், இதற்கு பதில் அளிக்க கேட்டு தமிழக அரசு, தமிழக டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் பிறப்பிக்க உத்தரவிட்டனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக் கின் அடுத்த விசாரணையை வரும் 2ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
- டில்லி சிறப்பு நிருபர் -

