பரப்பளவு பிழைகளை சரி செய்ய அதிகாரம் கேட்கும் நில அளவை துறை
பரப்பளவு பிழைகளை சரி செய்ய அதிகாரம் கேட்கும் நில அளவை துறை
ADDED : பிப் 13, 2024 08:25 AM

சென்னை : பட்டா உள்ளிட்ட ஆவணங்களில், நிலத்தின் பரப்பளவு பிழைகளை சரி செய்வது தொடர்பான கோப்புகளை அங்கீகரிக்கும் அதிகாரத்தை, நில அளவை துறை உதவி இயக்குனர்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் நிலங்களின் பட்டா, நில அளவை வரைபடம் பெறுவதில், மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டியுள்ளது. இதில், நில அளவை துறையினர் உரிய பணிகளை முடித்தாலும், சம்பந்தப்பட்ட கோப்புகளில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் வருவாய் துறையிடமே உள்ளது.
வருவாய் துறையில் மாவட்ட மற்றும் கோட்ட அளவில் உள்ள உயரதிகாரிகள், இதில் முடிவு எடுப்பதில் தாமதம் செய்கின்றனர். இதனால், பொது மக்கள் பிழையான பட்டா உள்ளிட்ட ஆவணங்களை சரி செய்ய முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், சொத்து விற்பனையில் நிலத்தின் உட்பிரிவு உருவாக்கம் தொடர்பான பணியிலும், தலைமையிடத்து துணை வட்டாட்சியர்களிடம் ஒப்புதல் பெற முடியாமல் மக்கள் தவிக்கும் நிலை ஏற்படுகிறது.
நில அளவை துறைக்கும் தாலுகா அலுவலகம்
நிலத்தை அளந்து உட்பிரிவை, நில அளவையாளர் கள் தான் உருவாக்குகின்றனர். இதை, தாலுகா அளவிலான துணை ஆய்வாளர்களே அங்கீகரிக்க அதிகாரம் வேண்டும். நில பரப்பளவு பிழைகளை சரி செய்யும் கோப்புகளை, மாவட்ட அளவில் உள்ள நில அளவை துறை உதவி இயக்குனர்களே அங்கீகரிக்க அதிகாரம் தர வேண்டும்.
வருவாய் துறையின் தாலுகா அலுவலகங்கள் போன்று, நில அளவை துறைக்கும் தாலுகா அளவில் தனி அலுவலகங்கள் ஏற்படுத்த வேண்டும். அப்போது தான், நிலம் சார்ந்த மக்களின் பல்வேறு பிரச்னைகளில் துரிதமான முடிவுகள் எடுக்க முடியும்.
- வெ.மகேந்திரகுமார்
மாநில தலைவர், தமிழக நில அளவை துறை அலுவலர் சங்கம்