1,500 பொறியாளர்களுக்கு உரிமம் நில அளவை துறை முடிவு
1,500 பொறியாளர்களுக்கு உரிமம் நில அளவை துறை முடிவு
UPDATED : அக் 29, 2026 10:48 PM
ADDED : அக் 29, 2026 10:44 PM
சென்னை: கட்டுமானப் பொறியியல் பிரிவில், பட்டம், பட்டயம் பெற்றவர்களில், 1,500 பேருக்கு, நில அளவை உரிமம், நடப்பு ஆண்டில் வழங்கப்பட உள்ளது.
தமிழகத்தில், வீடு, மனை போன்ற சொத்துக்கள் வாங்குவோர், அதற்கான பட்டா மாறுதலுக்காக, தாலுகா அலுவலகங்களில் விண்ணப்பிக்கின்றனர். இது தொடர்பான விண்ணப்பங்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில், தாலுகா அலுவலகங்களில், ஆட்கள் பற்றாக்குறை, முக்கிய பிரச்னையாக உள்ளது.
நிலங்களை அளந்து, எல்லை வரையறை செய்வது, உட்பிரிவு செய்வது போன்ற பணிகளுக்காக, நிலங்களை நேரில் சென்று அளக்க வேண்டியது அவசியம். ஆனால், போதிய எண்ணிக்கையில், நில அளவையாளர்கள் இல்லாததால், இப்பணிகள் பாதிக்கப்படுகின்றன.
இதை கருத்தில் வைத்து, நில அளவை பணியில், தனியார் பங்கேற்புக்கு வழிவிட, நில அளவைத் துறை முடிவு செய்தது. இதன்படி, கட்டுமானப் பொறியாளர்கள் மற்றும் பட்டயம் பெற்றோருக்கு, நில அளவை உரிமம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, நில அளவைத் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகம் முழுதும், நில அளவை பணிகளுக்கு வரும் விண்ணப்பங்கள் எண்ணிக்கை, வெகுவாக அதிகரித்துள்ளது. இதற்கு ஏற்ப, நில அளவை பணிக்கு, போதிய ஆட்கள் இல்லை. எனவே, நில அளவை பணியில், உரிமம் பெற்ற பொறியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதற்காக அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதில், தற்போது, 3,000க்கும் மேற்பட்டே உரிமம் பெற்றோர், நில அளவையாளர்களாக உள்ளனர். இந்நிலையில், நடப்பு நிதி ஆண்டில், மேலும், 1,500 பேருக்கு நில அளவை உரிமம் வழங்கப்பட உள்ளது. அரசு அனுமதி கிடைத்துள்ள நிலையில், இதற்கான பயிற்சி திட்டம், விரைவில் தொடங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
