காவி உடையணிந்து சூரிய நமஸ்காரம்: 2வது நாளாக விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானம்
காவி உடையணிந்து சூரிய நமஸ்காரம்: 2வது நாளாக விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானம்
UPDATED : மே 31, 2024 11:42 AM
ADDED : மே 31, 2024 10:38 AM

நாகர்கோவில்: விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி 2வது நாளாக தியானத்தில் ஈடுபட்டார். முன்னதாக அதிகாலையில் காவி உடையணிந்து சூரிய உதயத்தை கண்டு ரசித்ததுடன், சூரிய நமஸ்காரமும் செய்தார்.
கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில், பிரதமர் மோடி தன் மூன்று நாள் தியானத்தை நேற்றிரவு (மே 30) துவக்கினார். இதற்காக விவேகானந்தர் மண்டபத்தில், மூன்று அறைகளில் ஒன்று, பிரதமருக்கு 'ஏசி' வசதியுடன் தயார் செய்யப்பட்டது. 2வது அறையில், பிரதமர் அலுவலக அதிகாரிகள் தங்கவும், மற்றொன்று பிரதமருக்கு உணவு தயாரிக்கவும் ஒதுக்கப்பட்டன. இரவு முழுவதும் தியான மண்டபத்தில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, அதிகாலை வரை தொடர்ந்து தியானம் செய்தபடி இருந்தார்.
இன்று அதிகாலை 5 மணிக்கு காவி உடையணிந்து தியான மண்டபத்தை விட்டு வெளியே வந்த மோடி, காலை 5:55 மணிக்கு சூரிய உதய காட்சிகளை கண்டு ரசித்தார். அதன்பிறகு ஸ்ரீபாத மண்டபத்திற்கு சென்ற பிரதமர் மோடி, 10 நிமிடம் அமர்ந்து சூரிய நமஸ்காரம் செய்தார். பின்பு காலை 7:15 மணிக்கு மீண்டும் தியான மண்டபத்திற்குள் சென்று தனது 2வது நாள் தியானத்தை துவங்கினார்.
சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
விவேகானந்தர் பாறைக்கு செல்லும் பயணியரை தடுக்க வேண்டாம் என, பிரதமர் அலுவலகம் கூறியிருந்தாலும், நேற்று காலை 11:00 மணிக்கு பின் படகுகள் இயக்கப்படவில்லை. ஆனால், இன்று விவேகானந்தர் மண்டபத்துக்கு வழக்கம்போல் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். தியானம் செய்யும் மண்டப பகுதி தவிர மற்ற பகுதிகளுக்கு செல்லலாம். அவர்களின் முகவரி உட்பட பல்வேறு தகவல்களை பதிவு செய்து, கடும் சோதனைக்கு பிறகு விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல போலீசார் அனுமதித்தனர்.