போலீசின் சந்தேகத்திற்குரிய செயல்பாடே கரூரில் 41 பேர் உயிரிழக்க காரணம்: சி.பி.ஐ.,யிடம் த.வெ.க.,வினர் வாக்குமூலம்
போலீசின் சந்தேகத்திற்குரிய செயல்பாடே கரூரில் 41 பேர் உயிரிழக்க காரணம்: சி.பி.ஐ.,யிடம் த.வெ.க.,வினர் வாக்குமூலம்
ADDED : டிச 30, 2025 10:37 PM

சென்னை : கரூரில், 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து, மாவட்ட கலெக்டர், எஸ்.பி., தரப்பினரும், த.வெ.க., முன்னணி நிர்வாகிகளும், சி.பி.ஐ., அதிகாரிகளிடம் ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்தி உள்ளனர்.
கடந்த செப்., 27ல், கரூரில் த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்ற கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். கரூர் கலெக்டர் தங்கவேல், எஸ்.பி., ஜோஷ் தங்கையா, கூடுதல் எஸ்.பி., பிரேமானந்தன், டி.எஸ்.பி., செல்வராஜ், கரூர் நகர இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் ஆகியோரை, டில்லிக்கு அழைத்து, இரண்டாவது நாளாக இன்றும்(டிச.,30) விசாரணை நடத்தினர்.
ஆதாரம்
அதேபோல, த.வெ.க., முன்னணி நிர்வாகிகள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் மற்றும் கரூர் மாவட்ட செயலர் மதியழகன் ஆகியோரிடமும் விசாரணை நடத்தினர். இரு தரப்பினரிடமும் தனித்தனியாக ஒன்பது மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர். அப்போது, கரூர் சம்பவத்தில், 41பேர் உயிரிழந்தற்கான காரணங்கள் குறித்து, சி.பி.ஐ., அதிகாரிகளிடம் ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்தி உள்ளனர்.
கரூர் கலெக்டர் மற்றும் எஸ்.பி., உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் சார்பில் அளித்த வாக்குமூலம்:விஜய் கூட்டத்திற்கு சட்ட ரீதியாக ஆய்வு நடத்தி, அனுமதி வழங்கப்பட்டது. விதிகளுக்கு புறம்பாக எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. விஜய்யால் எந்தெந்த இடங்களில் காலதாமதம் செய்யப்பட்டது; ஏன் கூட்ட நெரிசல் ஏற்பட்டது என்பது குறித்த வீடியோ ஆதாரங்களை சமர்பித்து உள்ளோம்.
அலட்சியம்
த.வெ.க.,வினர் திட்டமிட்டு கூட்ட நெரிசலை ஏற்படுத்தினர். விஜய் பிரசாரம் செய்த இடத்திற்கு கூட்டம் அதிகமாக வருவது பற்றி, அறிவிப்பு வெளியிடப்பட்டது.த.வெ.க., நிர்வாகிகளுக்கும் எச்சரிக்கையும் விடப்பட்டது. ஆனால், அவர்கள் அதை கண்டுகொள்ளவே இல்லை.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
'மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த போதிலும், போலீசாரின் சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகளே, 41 பேரின் உயிரிழப்புக்கு காரணம்' என, த.வெ.க., நிர்வாகிகள் குற்றம் சுமத்தி உள்ளனர். விஜய் பிரசார வாகனத்தில் பதிவாகி இருந்த, 'சிசிடிவி' காட்சிகள் மற்றும் போலீசார் எந்த இடத்தில் எல்லாம் அலட்சியமாக செயல்பட்டனர் என்பது குறித்த 'வீடியோ' ஆதாரங்களையும், த.வெ.க.,வினர் சமர்பித்து உள்ளனர்.

