எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை: நீதிமன்றம் உத்தரவு
எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை: நீதிமன்றம் உத்தரவு
ADDED : பிப் 19, 2024 03:01 PM

சென்னை: பெண் பத்திரிகையாளர்களை அவதுாறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி. சேகருக்கு 1 மாதம் சிறைத் தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
பெண் பத்திரிகையாளர்கள் பணிபுரிவது குறித்து தரக்குறைவான கருத்தை நடிகர் எஸ்.வி.சேகர் கடந்த 2018ம் ஆண்டு தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் மொய்தீன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
எஸ்.வி.சேகர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் 3 பிரிவுகள் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் ஒரு பிரிவு என 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கு சென்னை எம்.பிக்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கிலிருந்து எஸ்.வி.சேகரை விடுவிக்க சிறப்பு நீதிமன்றம் மறுத்துள்ளது.
நடிகர் எஸ்.வி.சேகருக்கு 1 மாதம் சிறைத் தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அபராத தொகையை செலுத்திய பிறகு தண்டனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதாக எஸ்.வி.சேகர் தரப்பில் மனு தாக்கல் செய்ததை ஏற்று, தண்டனை நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

