ADDED : ஜன 17, 2025 11:01 PM
சென்னை:தமிழ் திரையுலகில் மூத்த நடிகரான எஸ்.வி.சேகர், நாடகப்பிரியா என்ற நாடகக் குழுவை நடத்தி வருகிறார். இதை அவரது தந்தை எஸ்.வி.வெங்கட்ராமன் துவக்கினார்.
அவரது நுாற்றாண்டு விழா, எஸ்.வி.சேகரின், 7,000வது நாடக விழா, நாடகக்குழுவின், 50ம் ஆண்டு விழா ஆகியவை, வரும், 20ம் தேதி ஆழ்வார்பேட்டை நாரதகான சபாவில் நடைபெற உள்ளன.
விழாவிற்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். துணை முதல்வர் உதயநிதி முன்னிலை வகிக்கிறார். விழாவில், நாடகக் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன. திரையுலகில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.
விழா குறித்து குறித்து எஸ்.வி.சேகர் கூறுகையில், ''நாடகப்பிரியா நாடகக்குழுவை என் தந்தை எஸ்.வி.வெங்கட்ராமன் துவக்கினார். அவர் லயன்ஸ் கிளப்புக்காக, 86,000 பாட்டில் ரத்தம் சேகரித்துள்ளார்.
''அவரது நுாற்றாண்டு விழா, நாடகக்குழுவின், 50ம் ஆண்டு விழா, நாடகப்பிரியாவின் 7,000வது நாடகம், என் 75ம் ஆண்டு பவளவிழா ஆகியவற்றை, ஒன்றாக சேர்த்து சேர்த்து கொண்டாடுகிறோம். தமிழக நாடக வரலாற்றில், 7,000 நாடகம் என்பது, மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது,'' என்றார்.