பரவுகிறது பன்றி காய்ச்சல்: கேரள மாநில சோதனைச்சாவடிகளில் சோதனை தீவிரம்
பரவுகிறது பன்றி காய்ச்சல்: கேரள மாநில சோதனைச்சாவடிகளில் சோதனை தீவிரம்
ADDED : டிச 26, 2025 02:38 AM

போடி: கேரள மாநிலம் ஆலப்புழா, கோட்டயம் பகுதிகளில் ஆப்ரிக்கன் பன்றிக்காய்ச்சல் பரவி வரும் நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள அம்மாநில சோதனைச்சாவடிகள் குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டில் கால்நடை பராமரிப்புத்துறையின் நோய்புலனாய்வு அதிகாரிகள் வாகன சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கேரள மாநிலம் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் பறவை காய்ச்சல் பாதிப்பு உள்ளது. இந்நிலையில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் பாதிப்பும் இருப்பதாக உறுதி செய்யப் பட்டுள்ளது.
இதனையொட்டி கேரளாவில் இருந்து தேனி மாவட்டம் குமுளி, கம்பம்மெட்டு, முந்தல் செக்போஸ்ட்டுகள் வழியாக வரும் வாகனங்களை கால்நடை பராமரிப்பு நோய் புலனாய்வு அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர்.
ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் பரவாமல் இருக்க செக்போஸ்ட்களில் ஒரு கால்நடை உதவி டாக்டர், கால்நடை ஆய்வாளர், பராமரிப்பு உதவியாளர் என மூன்று பேர் காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரையும், மாலை 6:00 முதல் காலை 6:00 மணி வரையும் இரு குழுக்களாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் இருந்து வரும் வேன், லாரி உள்ளிட்ட வாகனங்களை இக்குழுவினர் சோதனை செய்கின்றனர். வாகன டயர்களில் குளோரின் டை ஆக்சைடு கிருமி நாசினியும் தெளிக்கப்படுகிறது. செக்போஸ்ட் ரோடுகளில் பிளிச்சிங் பவுடரும் தெளிக்கப்படுகிறது.
சந்தேகப்படும் வகையில் கால்நடைகளை ஏற்றி வரும் வாகனங்களை திரும்பவும் கேரளாவிற்கு திருப்பி அனுப்பியும் வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் இருந்து கால்நடைகளை வாகனங்களில் கேரளாவிற்கு ஏற்றிச் செல்ல எந்த தடையும் இல்லை என கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

