'பேட் கேர்ள்' திரைப்படத்திற்கு தாம்பிராஸ் எதிர்ப்பு
'பேட் கேர்ள்' திரைப்படத்திற்கு தாம்பிராஸ் எதிர்ப்பு
ADDED : ஜன 30, 2025 10:45 PM

மதுரை; 'பேட் கேர்ள்' தமிழ் திரைப்படத்தின் டீசர் வெளியான நிலையில் ஒட்டு மொத்த இளம் தலைமுறை பெண்களையும் அதில் கேவலமாக சித்தரித்து இருப்பதாக தமிழ்நாடு பிராமணர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மாநிலத் தலைவர் என்.நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கை: 'பேட் கேர்ள்' திரைப்படத் தயாரிப்பாளரும், படக்குழுவும் இளைய தலைமுறையினரை கலாசார சீரழிவை நோக்கி எடுத்துச் செல்ல முற்பட்டுள்ளனர். பிராமணர் சமூகத்தினரை மட்டுமின்றி ஒட்டு மொத்த இளம் தலைமுறை பெண்களையும் கேவலமாக சித்தரித்திருப்பது வேதனை அளிக்கிறது.
இளம் தலைமுறையின் தவறான வாழ்க்கை முறையை 'பெண்ணுரிமை' போல படம் பிடித்து காட்டியுள்ள வெற்றிமாறன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு தமிழ்நாடு பிராமணர் சங்கம் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
இப்படத்திற்கு சென்சார் போர்டு வழங்கியுள்ள 'ஏ' சான்றிதழை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். தமிழகத்தில் அண்ணா பல்கலை பாலியல் வன்முறை சம்பவம் சர்ச்சையாகியுள்ள நிலையில் தமிழக அரசு இப்படத்திற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.