ADDED : ஜன 01, 2024 06:31 AM

என். மல்லிகை மன்னன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ -மெயில்' கடிதம்: சமீபத்தில், கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் கூறிய முதல்வர் ஸ்டாலின், அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல், 'தமிழை வளர்த்தவர்கள் கிறிஸ்துவர்கள்' என்று அவர்களின் புகழ் பாடி இருக்கிறார்.
ஜி.யு.போப், கால்டுவெல், வீரமாமுனிவர் போன்றோர் தமிழ் மொழியை கற்றது, தமிழை வளர்க்க அல்ல... கிறிஸ்துவ மதத்தை பரப்பவும், இயேசு நாதரின் புகழ் பாடவும் தான்.
அந்த காலத்தில் கிறிஸ்துவ பாதிரியார்கள் வளர்க்கும் அளவுக்கு, தமிழ் மொழி சீரழிந்து சின்னா பின்னமாகவில்லை. கம்பர், வள்ளுவர், இளங்கோ, பாரதியார், சேக்கிழார், நக்கீரன், அவ்வையார் போன்ற தமிழ் புலவர்களால் தான் தமிழ் மொழி வளர்ச்சி அடைந்தது.
மதுரையில் மூன்று சங்கங்கள் அமைத்து வளர்ந்த மொழி தமிழ். சிவபெருமானே தமிழ்ச் சங்கத்தின் தலைவராக இருந்த பெருமைக்குரியது. ஏடுகளில் இருந்த காவியங்களை, புத்தகமாக அச்சடித்து வெளியிட்டவர் உ.வே.சாமிநாதய்யர்.
நாயன்மார்கள், ஆழ்வார்கள் பக்தியை வளர்த்து காவியங்கள் படைக்க தமிழ் மொழியை கையாண்டனர். தேவாரம், திருவாசகம், திருப்புகழ் போன்றவை தமிழில் பக்தி மணம் கமழும் காவியங்கள். இதெல்லாம் நாத்திகம் பேசும் திராவிடச் செம்மல்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.
கிறிஸ்துவர்களின் ஓட்டுகளை பெற, கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் சொல்லும் இவர்கள், மறந்தும் கூட ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்ல மாட்டர். எப்படி இருந்தாலும், சூடு, சொரணை அற்ற ஹிந்துக்கள் நமக்கு ஓட்டு போட்டு விடுவர் என்ற மிதப்பு தான் அதற்கு காரணம்.
ஒருவேளை, தப்பி தவறி ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லி விட்டால், 'ஈ.வெ.ரா.,வின் பேரன், அண்ணாதுரையின் தம்பி' என்றெல்லாம் மேடைகளில் தம்பட்டம் அடிக்க முடியாதல்லவா?