கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொலை: சி.பி.ஐ., விசாரணை நடத்த வலியுறுத்தல்
கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொலை: சி.பி.ஐ., விசாரணை நடத்த வலியுறுத்தல்
ADDED : ஆக 19, 2026 05:26 AM

சென்னை: கர்நாடக வனத்துறையால் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் என, சட்டசபையில் வலியுறுத்தப்பட்டது.
இதுதொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் மீது நடந்த விவாதம்:
* தி.மு.க., - பால் மனோஜ் பாண்டியன்: கர்நாடக மாநில வனப்பகுதியில், மூன்று தமிழர்கள் கால்நடைகளை தேடி சென்றபோது, அநியாயமாக அம்மாநில வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது, மனித உரிமை மீறல். சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும்.
* அ.தி.மு.க., - பழனிசாமி: மான்களை வேட்டையாடியதால், அவர்களை சுட்டதாக கர்நாடக வனத்துறையினர் சொல்கின்றனர். இதில், மிப்பெரிய சதி உள்ளது. நியாயமான விசாரணை நடக்க வேண்டும் என்றால், இந்த வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும்.
தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் என்பதால், தமிழக அரசு நிதியுதவி வழங்க முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
மேலும், பா.ஜ., - போஜராஜன், பா.ம.க., - கணேஷ்குமார், காங்கிரஸ் - தாரகை கத்பட், இந்திய கம்யூ.,- ராமச்சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூ., - லதா ஆகியோரும் பேசினர்.
அதற்கு பதிலளித்து, அமைச்சர் நிர்மல்குமார் பேசியதாவது:
கர்நாடகா, தோமையார் பாளையம் கிராமத்தில், 75 ஆண்டுகளாக தமிழர்கள் வசிக்கின்றனர். கர்நாடகா வனத்துறையின் வேட்டை தடுப்பு நடவடிக்கையில், மூன்று பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக, முறையான நீதி விசாரணைக்கு, கர்நாடக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மாஜிஸ்திரேட் விசாரணைக்கு பின், தமிழக அரசு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கும்.
அங்கே சுடப்பட்ட தமிழர்கள், கர்நாடகாவில் வாழ்பவர்கள். அங்கு நடக்கும் ஒவ்வொரு நகர்வும் மூன்று நாட்களாக கண்காணிக்கப்படுகிறது.
இவ்வாறு விவாதம் நடந்தது.
