'போர்வெல்' பகுதிகளில் தடுப்பணை கட்ட தமிழக, புதுச்சேரி அரசுகளுக்கு உத்தரவு
'போர்வெல்' பகுதிகளில் தடுப்பணை கட்ட தமிழக, புதுச்சேரி அரசுகளுக்கு உத்தரவு
ADDED : பிப் 16, 2025 06:16 AM

சென்னை: 'குடிநீருக்காக ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பகுதிகளில், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த, சிறிய தடுப்பணைகள், பண்ணைக் குட்டைகள் அமைக்க வேண்டும்' என, தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளுக்கு, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியின் குடிநீர் தேவைக்காக, தமிழகத்தின் விழுப்புரம், கடலுார் மாவட்டத்தை ஒட்டிய கிராமங்களில், 28 கோடி ரூபாயில், 84 ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணியை, 2023ல் புதுச்சேரி அரசு துவக்கியது.
புதுச்சேரி பகுதியில் ஆழ்துளை கிணறுகள் தோண்டப்பட்டாலும், அதையொட்டிய தமிழக கிராமங்களில், நிலத்தடி நீர் மட்டம் குறையும். விவசாயத்திற்கும், குடிக்கவும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என, விழுப்புரம், கடலுார் மாவட்டங்களை சேர்ந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தமிழக எல்லை அருகே ஆழ்துளை கிணறுகள் அமைக்க, தடை விதிக்கக்கோரி விழுப்புரத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவர், 2023ல் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர்குழு உறுப்பினர் சத்யகோபால் அளித்த தீர்ப்பு:
குடிநீர் தேவைக்காக, தமிழகத்தை ஒட்டிய கிராமங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்க, புதுச் சேரி அரசு திட்டமிட்டது. அதனால், தங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் எனக்கூறி, ஆழ் துளை கிணறுகள் தோண்ட, விழுப்புரம், கடலுார் மாவட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி நிலத்தடி நீர் ஆணையமும், தமிழக நீர்வளத்துறையும், அவரவர் பகுதிகளில், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த, தடுப்பணைகள், பண்ணை குட்டைகள் அமைக்க வேண்டும்.
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியப் பகுதியிலும், அதையொட்டிய புதுச்சேரி பகுதியிலும், தடுப்பணைகள், பண்ணை குட்டைகள் அமைப்பதற்கான இடங்களை, தமிழக, புதுச்சேரி அரசுகள் அடையாளம் காண வேண்டும்.
தேவையான நிதி ஒதுக்கி, தடுப்பணைகள், பண்ணை குட்டைகள் அமைத்து, மழைநீரை சேமிக்க வேண்டும். அதன் வாயிலாக, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.