தமிழனுக்கு மட்டும் இரு மொழி கொள்கை தமிழக பா.ஜ., பொருளாளர் குற்றச்சாட்டு
தமிழனுக்கு மட்டும் இரு மொழி கொள்கை தமிழக பா.ஜ., பொருளாளர் குற்றச்சாட்டு
ADDED : பிப் 20, 2025 09:19 PM
சென்னை:'தமிழை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு மட்டும்தான் இரு மொழிக் கல்வி; மற்றவர்களுக்கு அது கிடையாது, இதுதான் தி.மு.க.,வின் ஹிந்தி எதிர்ப்பு லட்சணம்' என, தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் குற்றம்சாட்டி உள்ளார்.
அவரது அறிக்கை:
சென்னையில் 49 தெலுங்கு, 24 உருது, 12 ஹிந்தி; நான்கு மலையாளம் மற்றும் குஜராத்தி வழி பள்ளிகள் உள்ளன. ஒரு சமஸ்கிருத பள்ளி செயல்பட்டு வருகிறது. உருது மொழி பள்ளிகள் தவிர, மற்றவை தனியார் பள்ளிகள். இவற்றில் பெரும்பாலானப் பள்ளிகள் மும்மொழி, பாடத் திட்டத்தில் செயல்பட்டு வருகின்றன.
உருது மொழியை பாடமாகக் கொண்ட, ஐந்து அரசு பள்ளிகளில், எழும்பூரில் உள்ள, அரசு பெண்கள் பள்ளியில், மும்மொழி பாடத்திட்டம் உள்ளது. திருவல்லிக்கேணி, அரசு பள்ளியில் உருது வழி கல்வி; இங்கு தமிழ் கிடையாது. மீதமுள்ள மூன்று அரசு பள்ளிகளிலும், உருது மற்றும் ஆங்கில வழிக் கல்வி மட்டும் கற்பிக்கப்படுகிறது. இப்பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி கிடையாது.
கோவை மாவட்டம், வடுகண்காளி பாளையம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில், உருது வழியில் மட்டும் பாடம் கற்பிக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில், 40 அரசு பள்ளிகளில், கன்னட வழிக் கல்வி உள்ளது. இவற்றில் பெரும்பாலானப் பள்ளிகளில், தமிழ் மொழி பாடம் கிடையாது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 415 பள்ளிகளில் தெலுங்கு, 22 பள்ளிகளில் கன்னட மொழிப் பாடங்கள் உள்ளன. இவற்றில் சில பள்ளிகளில், தமிழ் மொழிப் பாடமாகக்கூட இடம் பெறவில்லை. விழுப்புரத்தில் உள்ள, 26 உருது மொழி பள்ளிகளில், பெரும்பாலும் தமிழ் மொழி கிடையாது. இங்கு ஒரியா, அசாம் மொழிகளுடன், தமிழ், ஆங்கிலம் சேர்த்து மும்மொழி பள்ளிகள் உள்ளன.
வேலூரில் உள்ள இரண்டு அரசு பள்ளிகளில் மும்மொழி; 124 பள்ளிகளில் உருது; 11 பள்ளிகளில் தெலுங்கு மொழி உள்ளது. கடலுாரில் இரண்டு தனியார் பள்ளிகளில், உருது மொழி உள்ளது. இங்கு தமிழ் வழிக் கல்வியே கிடையாது. தமிழை தாய் மொழியாக கொண்டவர்களுக்கு மட்டும் தான், இருமொழிக் கல்வி. மற்றவர்களுக்கு அது கிடையாது. இதுவே, தி.மு.க.,வின் ஹிந்தி எதிர்ப்பு லட்சணம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.