ADDED : ஜன 23, 2025 01:53 AM
''மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டியில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்படாது; அதற்கான அறிவிப்பை மத்திய அரசு இன்று வெளியிடும்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.
மதுரை அருகே உள்ள அரிட்டாப்பட்டி கிராமத்தில், டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு, அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில், இந்த கிராமங்களைச் சேர்ந்த ஊர்த் தலைவர்களை அழைத்துக் கொண்டு,நேற்று டில்லியில், மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை, தமிழக பா.ஜ.,தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார்.
பின், அண்ணாமலை அளித்த பேட்டி:
டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதால், பாதிப்புக்கு உள்ளாகும் கிராமங்களைச் சேர்ந்த தலைவர்கள் 10 பேரும், மத்திய அமைச்சரிடம், தங்கள் பகுதிக்கு ஏற்படும் பாதிப்புகளை விளக்கினர்.
அங்குள்ள கோயில்கள், சமணப் படுக்கைகள், விவசாய நிலங்கள் என பாதிப்புக்கு உள்ளாகும் அனைத்து விஷயங்கள் குறித்தும் பேசினர்.இந்த பகுதிகளில்தான் டங்ஸ்டன் இருப்பதாகக் கூறி, 2021 செப்., 14 ல், ஜியாலஜிக்கல் சர்வே ஆப் இந்தியா சார்பில் அறிக்கை தரப்பட்டது. பின், மாநில அரசுக்கு, மத்திய அரசு கடிதம் எழுதியது.
அந்த கடிதத்திற்கு மாநில அரசு பதில் அனுப்பியது. அதில், எந்த இடத்திலும் திட்டத்தை நிறுத்த கோரவில்லை.
அதன்பின்பே, ஏலத்துக்கான வேலைகள் துவங்கின. 2024 நவ., 7ல், தனியார் நிறுவனம் ஏலம் எடுத்தது. அதன்பின், கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தகவல் தெரிந்தது, தமிழக பா.ஜ., சார்பில், அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து, மக்களுக்கான பாதிப்புகளைச் சொல்லி, திட்டத்தை உடனடியாக நிறுத்தக் கோரினோம்.
தற்போது, திட்டம் நிறுத்தப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது மத்திய அரசு.
பாதிப்புக்குள்ளாவதாக அஞ்சும் கிராம மக்கள் கோரிக்கைக்கு செவி சாய்த்து, அதை செய்துள்ளது தமிழக பா.ஜ., டங்ஸ்டன் சுரங்கம் அமைந்தால், அதன் வாயிலாக மத்திய அரசுக்கு எவ்விதத்திலும் வருமானம் கிடைக்காது. ஆனால், திட்டம் வர மத்திய அரசு விரும்புவது போல, மாநிலத்தில் ஆள்வோர் தகவல் பரப்புகின்றனர்; அது தவறு.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது டில்லி நிருபர் -