7 இலக்குகளை கொண்ட தமிழக பட்ஜெட்: நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு உரை
7 இலக்குகளை கொண்ட தமிழக பட்ஜெட்: நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு உரை
UPDATED : பிப் 19, 2024 10:39 AM
ADDED : பிப் 19, 2024 09:43 AM

சென்னை: 2024 - 25ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தமிழக சட்டசபையில், இன்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் ஆகும். முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாக தங்கம் தென்னரசு தெரிவித்தார். சமூக நீதி, கடைக்கோடி தமிழருக்கும் நல வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம் உள்ளிட்ட 7 இலக்குகளை கொண்டது இந்த பட்ஜெட் என தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட தியாகராஜன், 2021 ஆகஸ்ட் 13ல், 2021 - 22ம் நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அடுத்த ஆண்டு சட்டசபையில், முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
அடுத்து, 2023 - 24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டையும் தியாகராஜன் தாக்கல் செய்தார். பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பின், கடந்த ஆண்டு மே மாதம், அவர் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக மாற்றப்பட்டு, நிதி அமைச்சராக தங்கம் தென்னரசு நியமிக்கப்பட்டார்.
நிதி அமைச்சராக பொறுப்பேற்ற பின், தன் முதல் பட்ஜெட்டாக, 2024 - 25ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை, இன்று காலை சட்டசபையில் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
'மாபெரும் தமிழ் கனவு'
அப்போது அவர் ஆற்றிய உரை: பட்ஜெட் தயாரிப்புக்கு வழிகாட்டிய முதல்வருக்கு நன்றி. இந்தியாவின் 2வது பொருளாதார மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழக அரசின் நலத்திட்டங்கள் தமிழர்களை தலைநிமிர செய்துள்ளது. 'மாபெரும் தமிழ் கனவு' என்ற தலைப்பில் 7 பகுதிகளாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. சமூக நீதி, கடைக்கோடி தமிழருக்கும் நல வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமை வழிப் பயணம், தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும் என 7 இலக்குகளில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
கூட்டாட்சி தத்துவத்தை அடியோடு மறந்து மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு நடந்து கொள்கிறது. தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.உலகின் தலைசிறந்து பல்கலை.,களில் தமிழ் நூல்கள் இடம்பெற செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் உரையாற்றினார்.

