வலுத்தது பழுக்குமா, வதந்தி நிஜமாகுமா; இன்று மாலை முடிவு தெரியும்
வலுத்தது பழுக்குமா, வதந்தி நிஜமாகுமா; இன்று மாலை முடிவு தெரியும்
ADDED : ஆக 22, 2024 09:56 AM

சென்னை: ஆகஸ்ட் 27ம் தேதி முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்ல உள்ள நிலையில், தமிழக அமைச்சரவையில் இன்று மாலை மாற்றம் செய்யப்பட உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் 27ம் தேதி அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார். மொத்தம் 17 நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். அதில் தமிழகத்திற்கு புதிய தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட உள்ளன. இந்நிலையில், தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு, இன்று(ஆகஸ்ட் 22) மாலை அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது ஸ்டாலின் உடன் சேர்த்து மொத்தம் 34 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். மூத்த அமைச்சர் ஒருவர், வேறு இரண்டு அமைச்சர்கள் மாற்றப்பட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
3 புதியவர்கள் அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்புள்ளது. இலாகா மாற்றம் பெரியளவில் இருக்கும். முக்கிய அமைச்சர்களின் இலாகா மாற்றமும் பெரிய அளவில் இருக்கும் என்றும் கோட்டை வட்டாரத்தில் தகவல்கள் கசிந்துள்ளன.
உதயநிதிக்கு என்ன பொறுப்பு
உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் வாய்ப்பு வழங்கப்படுமா? இல்லை வேறு ஏதேனும் முக்கிய பொறுப்புகள் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் நிருபர்கள் கேள்விக்கு, கோரிக்கைகள் வலுத்துள்ளன. இன்னும் பழுக்கவில்லை என சூசகமாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.