தமிழக முதல்வரின் சிறப்பு பதக்கங்கள்:15 போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவிப்பு
தமிழக முதல்வரின் சிறப்பு பதக்கங்கள்:15 போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவிப்பு
ADDED : ஆக 15, 2024 04:28 AM

சென்னை : சுதந்திர தினத்தையொட்டி, தமிழக முதல்வரின் சிறப்பு பதக்கங்கள், 15 காவல் துறை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
புலன் விசாரணை பணியில், மிகச் சிறப்பாக பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும், 10 காவல் துறை அதிகாரிகள், முதல்வரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்பு பணி பதக்கங்கள் பெற தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
வேலுார் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் புனிதா; சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோத்குமார்; கடலுார் மாவட்டம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி., சவுமியா; திருப்பூர் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சொர்ணவள்ளி; நாகர்கோவில் குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் பார்வதி.
திருப்பூர் குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் ராதா; செங்கல்பட்டு டி.எஸ்.பி., புகழேந்தி கணேஷ்; ஈரோடு மாவட்டம், பெருந்துறை இன்ஸ்பெக்டர் தெய்வராணி; வேலுார் மாவட்டம், பொன்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசி; துாத்துக்குடி மாவட்டம் ஊரக உட்கோட்ட டி.எஸ்.பி., சுரேஷ் ஆகியோர், பதக்கத்திற்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
பொதுச்சேவை
இதேபோல், பொதுமக்கள் சேவையில், தன்னலம் கருதாமல், சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய, ஐந்து போலீஸ் அதிகாரிகளுக்கு, சிறந்த பொதுச் சேவைக்காக, முதல்வரின் காவல் பதக்கம் வழங்கப்பட உள்ளது.
இப்பதக்கம் பெற, சென்னை குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை ஐ.ஜி., அன்பு; சென்னை தனிப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை எஸ்.பி., கார்த்திக்; சேலம் தனிப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை டி.எஸ்.பி., பூபதிராஜன்; சென்னை காவல் தொலை தொடர்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சீனிவாசன்; சென்னை நுண்ணறிவு பிரிவு எஸ்.ஐ., முபைதுல்லா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும், தலா 8 கிராம் எடையுள்ள தங்க பதக்கம்; 25,000 ரூபாய் ரொக்கப் பரிசு, பிறிதொரு விழாவில் முதல்வரால் வழங்கப்படும்.