ரஷ்ய நாட்டில் தவிக்கும் தமிழக டாக்டர் நாடு திரும்ப உதவுமாறு மனைவி கோரிக்கை
ரஷ்ய நாட்டில் தவிக்கும் தமிழக டாக்டர் நாடு திரும்ப உதவுமாறு மனைவி கோரிக்கை
ADDED : நவ 10, 2025 01:10 AM
சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் டாக்டர் ஜெகதீஸ்வரன். 2022ல், அர்மேனியா பல்கலையில் மருத்துவ பட்டம் பெற்றார். சென்னையை சேர்ந்த யாமினியை திருமணம் செய்தார். இவர்களுக்கு பெண் குழந்தை உள்ளது.
இவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம், அர்மேனியாவிலிருந்து தமிழகம் வந்தனர். மனைவி சென்னையில் இருந்த நிலையில், ஜெகதீஸ்வரன் தன் நண்பருடன் ரஷ்யா சென்றார். தற்போது, அவர் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது.
டாக்டரின் மனைவி யாமினி கூறியதாவது:
என் கணவர், அர்மேனியாவில் உள்ள மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். நாங்கள், 2022 முதல் அர்மேனியாவில் வசித்து வருகிறோம். கடந்த ஆகஸ்ட் மாதம் குடும்பத்தினரை சந்திக்க தமிழகம் வந்தோம்.
அப்போது, ரஷ்யாவில் கல்வி சார்ந்த வழிகாட்டுதல்கள் வழங்கும், என் கணவரின் நண்பர் சேகர் மணிகண்டன், என் கணவருக்கு ரஷ்ய மொழி தெரியும் என்பதால், அவரை ரஷ்யாவுக்கு அழைத்தார்.
அதை ஏற்று, சுற்றுலா விசாவில், சேகர் மணிகண்டனுடன் என் கணவர் கடந்த செப்.,15ம் தேதி ரஷ்யா புறப்பட்டார். ரஷ்யாவின் சோச்சி விமான நிலையத்திற்கு அவர்கள் சென்றனர்.
அங்கு குடியுரிமை அதிகாரிகள், இருவரையும் காரணமே இல்லாமல், விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். ஒரு வாரத்திற்கு பிறகு, சேகர் மணிகண்டன் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
ஆனால், என் கணவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை எனக்கூறி, அவரை விடுவிக்க மறுத்துள்ளனர். அவரது உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய வழக்கறிஞர்கள் உதவியுடன், அவர் குடியுரிமை அதிகாரிகளிடம் இருந்து மீட்கப்பட்டு உள்ளார்.
ஆனால், அவரிடம் தற்போது, 'பாஸ்போர்ட்' மட்டுமே உள்ளது. மற்ற ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் வழங்கவில்லை. ரஷ்யாவில் உள்ள இந்திய துாதரகம், என் கணவரை மாஸ்கோவுக்கு அழைக்கிறது.
ஆனால், மாஸ்கோ செல்வதற்கு என் கணவரிடம் முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை. உதவி கோரி மத்திய வெளி யுறவு துறை அமைச்சகத்தை நாடினோம்.
அதில் எந்த முன்னேற்றமும் இல்லை. தமிழக பா.ஜ., நிர்வாகிகளிடமும் முறையிட்டுள்ளோம். மத்திய, மாநில அரசுகள், ரஷ்யாவில் சிக்கி தவிக்கும் என் கணவரை பாதுகாப்பாக, பத்திரமாக இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

