மின் கம்பி அறுந்து விழுந்ததும் மின்சாரம் துண்டிப்பு சாத்தியமா?
மின் கம்பி அறுந்து விழுந்ததும் மின்சாரம் துண்டிப்பு சாத்தியமா?
ADDED : ஜன 13, 2024 02:25 AM

சென்னை: சென்னையில் சில இடங்களில் தரைக்கு அடியில் கேபிள்; மற்ற அனைத்து பகுதிகளிலும் மின் கம்பம் மேல் செல்லும் கம்பி வாயிலாக மின் வினியோகம் செய்யப்படுகிறது.
ஒரு கம்பத்திற்கும், மற்றொரு கம்பத்திற்கும் இடையே அதிக இடைவெளி, மழை, பலத்த காற்று உள்ளிட்ட காரணங்களால், மின் கம்பி அறுந்து விழுகிறது.
அந்த கம்பியை மிதிக்கும் மக்கள் மற்றும் கால்நடைகள் மின்சாரம் பாய்ந்து, மின் விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர்.
டிஜிட்டல் மீட்டர்
இதை தடுக்க, மாநிலம் முழுதும் உள்ள, 4.05 லட்சம் டிரான்ஸ்பார்மர்களிலும், டிஜிட்டல் மீட்டர், 'டிரிப்பிங் டிவைஸ்' சாதனங்களை பொருத்தி, டிரான்ஸ்பார்மர் கண்காணிப்பு கட்டமைப்பை ஏற்படுத்தவும், அதை தொலைதொடர்பு வசதியுடன் பிரிவு அலுவலகங்களில் இணைக்கவும் மின் வாரியம் முடிவு செய்தது.
இதன் வாயிலாக, மின் கம்பி அறுந்து விழுந்ததும், டிரிப்பிங் சாதனம் உடனே செயல்பட்டு டிரான்ஸ்பார்மரில் இருந்து மின் கம்பிக்கு மின்சாரம் செல்வதை துண்டிக்கும்.
இதனால், மின் கம்பி அறுந்து விழுந்தாலும் மின்சாரம் பாயாது. இந்த விபரம், அலுவலகத்தில் பணிபுரிவோருக்கு, 'சிக்னல்' வாயிலாக தெரிவிக்கப்படும். அந்த இடத்திற்கு ஊழியர்கள் விரைந்து வந்து பழுதை சரிசெய்வர். இத்திட்டத்தை மின் வாரியம் இன்னும் செயல்படுத்தாமல் உள்ளது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தொழில்நுட்பம்
எந்த மாநிலத்திலும், கம்பி அறுந்து விழுந்ததும் மின்சாரம் துண்டிக்கும் வசதி ஏற்படுத்தப்படவில்லை. தமிழகத்தில், சில இடங்களில் சோதனை செய்யப்பட்டது. ஆனால், வெற்றிகரமாக அமையவில்லை.
எனவே, கம்பி அறுந்த உடனே மின்சாரம் துண்டிக்கும் தொழில்நுட்பம், அதை எந்த முறையில் செயல்படுத்தலாம் என்பது தொடர்பாக, சி.பி.ஆர்.ஐ., எனப்படும், மத்திய எரிசக்தி ஆராய்ச்சி நிறுவனத்திடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. அதன் ஆலோசனைக்கு ஏற்ப விரைவில் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.