மீன்வள துறையில் மீட்பு படகு 'நோ': தத்தளித்தோரை மீட்ட ஆந்திர மீனவர்கள்
மீன்வள துறையில் மீட்பு படகு 'நோ': தத்தளித்தோரை மீட்ட ஆந்திர மீனவர்கள்
UPDATED : ஆக 26, 2024 07:32 PM
ADDED : ஆக 26, 2024 04:08 AM

சென்னை: தமிழக மீன்வள துறையில் மீட்பு படகு கள் இல்லாததால், கடலில் தத்தளித்த, 10 தமிழக மீனவர்கள், ஆந்திர மீனவர்கள் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இயற்கை சீற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், கடலில் தத்தளிக்கும் மீனவர்களை மீட்க, மீன்வளத்துறை வாயிலாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்காக, சென்னை காசிமேடு, நாகப்பட்டினம், துாத்துக்குடி, கன்னியாகுமரி துறைமுகங்களில், 'முத்து, பவளம், நீலம், வலம்புரி' என்ற பெயரில் மீட்பு படகுகள் பயன்படுத்தப்பட்டன. இவை ஒவ்வொன்றும், ஒரு கோடி ரூபாயில் அரசால் வாங்கப்பட்டவை.
அவசர காலங்களில், இந்த படகுகள் கடலுக்கு சென்று, அங்கு தத்தளிக்கும் மீனவர்களையும், அவர்களது படகுகளையும் கரை சேர்க்கும் பணியில் ஈடுபடும். தற்போது மீட்பு படகுகள் காணாமல் போய்விட்டன; இருந்த சுவடு கூட தெரியவில்லை.இதனால், மீனவர்கள் மீட்பு கேள்விக்குறியாகி விட்டது.
இந்நிலையில், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, 10 மீனவர்கள் ஒரே படகில், 13ம் தேதி மீன்பிடிக்க சென்றனர். படகில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக நடுக்கடலில் தத்தளித்தனர்.
தமிழக மீன்வள துறைக்கு தகவல் தெரிவித்தாலும், மீட்பு படகுகள் இல்லாததால், மீனவர்கள் மீட்பில் தொய்வு ஏற்பட்டது. இதற்கிடையில், விசாகப்பட்டினத்தில் இருந்து, 40 நாட்டிக்கல் மைல் தொலைவில், மீனவர்கள் படகில் தத்தளிப்பது தெரியவந்தது.
அங்கு சென்ற விசாகப்பட்டினம் மீனவர்கள், படகுடன் தத்தளித்த தமிழக மீனவர்களை மீட்டு கரை சேர்த்துள்ளனர். இதற்காக, விசாகப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் சங்கத்திற்கு, தமிழக அனைத்து மீனவ சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
மீன்வள துறையிடம் மீட்பு படகு இருந்திருந்தால், தகவல் வந்தவுடன் விரைந்து சென்று மீனவர்களை மீட்டிருக்க முடியும். ஒரு வழியாக விசாகப்பட்டினம் மீனவர்கள், அந்த வேலையை செய்துள்ளனர். மீனவர்கள் பாதுகாப்பை தமிழக மீன்வளத்துறை உறுதி செய்ய வேண்டும். புதிய மீட்பு படகுகளை வாங்கி, மீன்பிடி துறைமுகங்களில் நிறுத்த வேண்டும். இதற்கு தமிழக முதல்வர் விரைந்து நிதி ஒதுக்க வேண்டும்.
- நாஞ்சில் ரவி
தலைவர் அனைத்து மீனவர்கள் சங்கம்