துறைமுகங்களை நவீனமாக மேம்படுத்துவதில் மத்திய அரசுக்கு தமிழகம் முழு ஒத்துழைப்பு: மத்திய அமைச்சர்
துறைமுகங்களை நவீனமாக மேம்படுத்துவதில் மத்திய அரசுக்கு தமிழகம் முழு ஒத்துழைப்பு: மத்திய அமைச்சர்
ADDED : டிச 08, 2024 01:40 AM

சென்னை: ''இந்திய கடல்சார் துறை வரும், 2047க்குள் பெரிய அளவில் முன்னேற்றம் அடையும்,'' என, மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் தெரிவித்தார்.
சென்னை எண்ணுாரில் உள்ள காமராஜர் துறைமுகத்தின், 25வது ஆண்டு விழா நேற்று நடந்தது. இந்த துறைமுகத்தின், 25வது ஆண்டு மலர் மற்றும், 2047ல் தொலைநோக்கு திட்டங்கள் குறித்த புத்தகங்களை, மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் வெளியிட்டார். மேலும், காமராஜர் துறைமுகத்தில் கப்பல் நிற்கும் பகுதியை, 520 கோடி ரூபாயில் ஆழத்தப்படுத்துவது உட்பட மூன்று திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.
முன்னேற்றம்
பின், அவர் பேசியதாவது: தமிழ் கலாசாரம், பண்பாடு எனக்கு பிடிக்கும். அதனால், தமிழகம் வருவதும் பிடிக்கும். காமராஜர் துறைமுகம், 25 ஆண்டுகளில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.
வரும், 2047ல் தற்சார்பு இந்தியாவாக, வளர்ந்த நாடாக மாற்றுவதே, பிரதமர் மோடியின் இலக்கு. இதற்கான திட்டமிடல், செயல்பாடுகள், ஆக்கப் பூர்வமான பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இந்திய கடல்சார் துறையில், 2047க்குள் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படும். இதற்காக பணியாற்றி வருகிறோம். உலகின் சிறந்த, 10 கடல்சார் துறை நாடுகளில், இந்தியாவும் ஒன்றாக இருக்கும். கடல்சார் மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும், வல்லரசு நாடுகளுக்கு இணையாக, இந்தியா வளர்ச்சி பெறுவதே நம் இலக்கு.
இந்தியா வேகமாக வளரும் பொருளாதார நாடாக இருக்கிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்தியா மூன்றாவது பெரிய நாடாக உருவெடுக்கும். உலக நாடுகளும் இதை ஏற்றுக் கொள்கின்றன. சரக்குகள் கையாளுதல், கப்பல்கள் கட்டுதல் உள்ளிட்ட சிறப்பு அம்சங்களுடன், இந்திய துறைமுகங்கள் திகழும்.
தற்போது, சென்னை - ரஷ்யாவில் உள்ள விளாடிவோஸ்டாக் இடையிலான கிழக்கு கடல் வழித்தடம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதன் வாயிலாக, வணிக முன்னேற்றம் ஏற்படும். தமிழகமும் தொழில், கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவற்றில் முன்னேற்றம் அடைந்துள்ளது. துாத்துக்குடி, சென்னை, எண்ணுார் காமராஜர் துறைமுகங்களை நவீன வசதிகள் நிறைந்ததாக மேம்படுத்துவதில், மத்திய அரசுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
சாதனை
தமிழக சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், ''காமராஜர் துறைமுகம், 2023 - 24ம் ஆண்டில், 445 மில்லின் டன் சரக்குகளை கையாண்டு சாதனை புரிந்துள்ளது.
''சென்னை எல்லை திட்டத்தின்படி, 139 கி.மீ., துாரம் பணிகள் முடிந்து, பயன்பாட்டிற்கு வரும் போது, காமராஜர் துறைமுகத்தில் சரக்குகள் கையாளும் திறன் மேலும் அதிகரிக்கும். தமிழக துறைமுகங்களை மேம்படுத்துவதில், மத்திய கப்பல் துறை போதிய ஒத்துழைப்பு அளித்து வருகிறது,'' என்றார்.
சென்னை துறைமுக தலைவர் சுனில் பாலிவால், துணைத் தலைவர் விஸ்வநாதன், காமராஜர் துறைமுகத்தின் நிர்வாக இயக்குனர் ஐரீன் சிந்தியா, ஸ்குவாஷ் விளையாட்டு வீரர் தீபிகா பல்லிகல், நடிகை ஆண்ட்ரியா உட்பட பலர் பங்கேற்றனர்.