"ரூ.6.64 லட்சம் கோடி முதலீடு": மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
"ரூ.6.64 லட்சம் கோடி முதலீடு": மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
ADDED : ஜன 08, 2024 05:39 PM

சென்னை: உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் ரூ.6,64,180 கோடி முதலீடுகள் கிடைத்துள்ளன என மாநாட்டின் நிறைவு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் குறிப்பிட்டார்.
சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இந்தியாவே வியக்கும் வகையில் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. என் இதயத்தில் நீங்கா இடம் பிடித்தார் டி.ஆர்.பி.ராஜா. அமைச்சர் பதவி ஏற்று குறுகிய காலத்தில் சாதனை படைத்துவிட்டார் டி.ஆர்.பி ராஜா.
ஆட்சிக்கு வந்த பின் தற்போது வரை 44 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டி உள்ளேன். இந்த மாநாடு தமிழகத்தின் வளர்ச்சிக்கு பாய்ச்சலாக அமையும். தமிழகத்தின் அடுத்த 20 ஆண்டு கால வளர்ச்சிக்கு அடிதளமாக அமையும்.
5068 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
மாநாட்டில் 5068 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியுள்ளன. உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் ரூ.6,64,180 கோடி முதலீடுகள் கிடைத்துள்ளன. நேரடியாக 14 லட்சத்து 54 ஆயிரத்து 712 பேருக்கு வேலை கிடைக்கும். 12 லட்சத்து 35 ஆயிரத்து 945 பேருக்கு மறைமுகமாக வேலை கிடைக்கும். உற்பத்தி துறையில் ரூ.3.79 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. ஸ்டார்ட் அப் துறையில் 200க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியுள்ளன.
அதிக முதலீடு
உலக முதலீட்டாளர் மாநாட்டில் எதிர்பார்த்ததை விட அதிக முதலீடு கிடைத்துள்ளது. முதலீடுகள் தொடர்ந்து செயல்வடிவம் பெறுவதை தொடர்ந்து கண்காணிப்பேன். உலக முதலீட்டாளர் மாநாடு மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. தொழில் துறை அமைச்சர் தலைமையில் சிறப்புக்குழு அமைக்கப்படும். ஒப்பந்தங்களை செயல்படுத்தும் நோக்கில் சிறப்புக்குழு செயல்படும். முதலீடுகள் செய்ய உறுதியளித்த அனைவருக்கும் நன்றி. இவ்வாறு அவர் பேசினார்.