சபரிமலை செல்லும் பக்தர்கள் மாசடைந்த நீரில் குளிக்க வேண்டாம்: தமிழக அரசு அறிவுரை
சபரிமலை செல்லும் பக்தர்கள் மாசடைந்த நீரில் குளிக்க வேண்டாம்: தமிழக அரசு அறிவுரை
ADDED : நவ 19, 2025 06:22 AM

சபரிமலை செல்லும் பக்தர்கள்: மாசடைந்த நீரில் குளிக்க வேண்டாம்: சென்னை: ''மூளையை தின்னும் அமீபா நோய் பரவலை தடுக்க, சபரிமலை செல்லும் பக்தர்கள், மாசடைந்த நீர்நிலைகளில் குளிக்க வேண்டாம்,'' என, மக்கள் நல் வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ்., வளாகத்தில், சமுதாய நல செவிலியர்கள், அலுவலக கண்காணிப்பாளர்கள் என, 220 பேருக்கு, பதவி உயர்வு ஆணைகளை நேற்று, அமைச்சர் சுப்பிரமணியன் வழங்கினார்.
பின், அமைச்சர் கூறியதாவது:
மூளையை தின்னும் அமீபா நோய் குறித்து, இரண்டு மாதங்களுக்கு முன் விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டது. கேரளாவில் அமீபா என்ற கொடிய நோய் பாதிப்பால் இறப்புகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு குளம், குட்டைகளில் நீண்ட நாட்கள் தேங்கி இருக்கிற மாசு படிந்த நீரில் குளிப்பது காரணம் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
சேறு நிறைந்த அழுக்கு படிந்த நிலையில் உள்ள நீரில் குளிப்பதனால், மூக்கு வழியாக பாக்டீரியா மூளையில் நுழைந்து, காய்ச்சல் பாதிப்பை உண்டாக்கி, உயிரிழப்பை ஏற்படுத்துகிறது. எனவே, சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள், அங்குள்ள மாசடைந்த நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.
இதுகுறித்து, சபரிமலைக்கு செல்வோர், கேரளா மற்றும் தமிழக அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

