பணியிடங்களை உருவாக்காத தமிழக அரசு டாக்டர்கள் போராட்டம்
பணியிடங்களை உருவாக்காத தமிழக அரசு டாக்டர்கள் போராட்டம்
ADDED : நவ 12, 2025 01:47 AM

சென்னை: தமிழகத்தில், 100 கட்டடங்கள் கட்டியும், புதிய பணியிடங்கள் உருவாக்காமல், மற்ற மருத்துவமனைகளில் இருந்து நியமிக்கப்படுவதால், மருத்துவ சிகிச்சையின் தரம் பாதிக்கப்படுவதாக, அரசு டாக்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், நேற்று தர்ணா போராட்டம் நடந்தது.
இதுகுறித்து, கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் பாலகிருஷ்ணன், ராமலிங்கம் ஆகியோர் கூறியதாவது:
சென்னை ஸ்டான்லி, ஓமந்துாரார், செங்கல்பட்டு, திருச்சி, சேலம் உள்ளிட்ட மருத்துவ கல்லுாரிகளில் இருந்து ஒன்பது துறைகள், கிண்டி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டன.
அதேபோல, இரண்டு உதவி பேராசிரியர்கள், மூன்று இணை பேராசிரியர்கள் மற்றும் ஒரு பேராசிரியரும் மாற்றப்பட்டனர்.
புதிதாக திறக்கப்பட்ட, 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள், வேறு சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் எண்ணிக்கையை குறைத்துள்ளனர்.
அதேபோல, 100 புதிய மருத்துவ கட்டடங்கள் கட்டப்பட்டாலும், அதற்கேற்ப போதிய மருத்துவ பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை.
மாறாக, மற்ற மருத்துவமனைகளில் பணியிடங்களை குறைத்து நியமித்து வருகின்றனர். இதனால், மருத்துவ பணிகள், கல்வித்தரம், நோயாளிகளுக்கான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 'மீள்நியமனம்' என்ற அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இந்த அரசாணையில், தற்போது உள்ள பதவி நீக்கப்பட்டு, பல நுாறு கி.மீ., துாரத்தில் உள்ள இடத்திற்கு, 400 டாக்டர்கள் மாற்றப்படுகின்றனர்.
அரசு மருத்துவமனைகளில், புற்றுநோய் டாக்டர்கள், பச்சிளம் குழந்தை டாக்டர்களை நியமிக்க முடியாத அளவுக்கு, நிதி பற்றாக்குறை நிலவுகிறது. அரசாணை 354ன்படி, 1,500 டாக்டர்கள் நியமிக்கப்பட்டிருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காது. தற்போது, பற்றாக்குறையை குறைக்க, 'மீள்நியமனம்' என்ற முறையை கைவிட்டு, 1,500 டாக்டர்களை புதிதாக நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

