மத்திய அரசுக்கு இணையான போனஸ்; தமிழக அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பு
மத்திய அரசுக்கு இணையான போனஸ்; தமிழக அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஜன 03, 2025 06:52 AM

மதுரை; 'மத்திய அரசு ஊழியர்களுக்கு போனசாக ரூ. 7 ஆயிரம் வழங்குவது போல தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரிவோருக்கும் பாரபட்சமின்றி முதல்வர் ஸ்டாலின் வழங்க வேண்டும்,' என, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
இச்சங்க மாநில தலைவர் தமிழ்ச்செல்வி, பொதுச் செயலாளர் ஜெயராஜ ராஜேஸ்வரன் கூறியுள்ளதாவது: 2006 ம் ஆண்டு மத்திய அரசால் வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட போனஸ் சட்டத்தின்படி அந்த ஆண்டு முதல் மத்திய அரசு ஊழியர்கள் ரூ.7 ஆயிரம் போனசாக பெற்று வருகின்றனர்.
அதனைப்பின்பற்றி தமிழகத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ரூ.7 ஆயிரம் போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ரூ. 3 ஆயிரம் மட்டுமே போனசாக வழங்குவது ஏற்புடையது அல்ல.
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ரூ.7 ஆயிரம் போனஸ் வழங்க அரசு ஆணை வெளியிட வேண்டும். ஏ மற்றும் பி பிரிவு அலுவலர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட கருணைத் தொகை, தொகுப்பூதியம், சிறப்புக் காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் பாரபட்சம் இன்றி ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டும் என கூறியுள்ளனர்.