ADDED : பிப் 13, 2024 04:00 AM
சென்னை: தமிழகத்தில், மத்திய அரசின், 'விஸ்வகர்மா' திட்டத்தை அமல்படுத்துமாறு, பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து, அத்திட்டத்திற்கான வயது வரம்பை, 18க்கு பதிலாக, 35 ஆக உயர்த்தி அமல்படுத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சிற்பி, தச்சர், பொற்கொல்லர் உட்பட, 18 பாரம்பரிய கைவினை கலைஞர்கள் பயன்பெற, பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை, மத்திய அரசு, 2023 செப்டம்பரில் துவக்கியது.
இத்திட்டத்தை, மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயல்படுத்துகிறது.
திட்டத்திற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது, 18. விண்ணப்பம் செய்வோரில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, முதல் கட்டமாக ஒரு வாரம் பயிற்சி அளிக்கப்படும். இதற்காக தினமும், 500 ரூபாய் உதவி தொகை உண்டு.
பயிற்சி முடித்த பின், 15,000 ரூபாய் மதிப்புள்ள தொழில் கருவிகள் அடங்கிய தொகுப்பு இலவசமாக வழங்கப்படும். இறுதியாக, ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும். இதற்கு, 5 சதவீதம் வட்டி. அந்த கடனை, 18 மாதங்களில் திரும்பி செலுத்தலாம்.
இதேபோல பயனாளிகளின் திறனுக்கு ஏற்ப, கூடுதல் பயிற்சி மற்றும் கடன் தொகை வழங்கப்படும்.
விஸ்வகர்மா திட்டம், குலக்கல்வியை ஊக்குவிப்பது போல இருப்பதாக கருத்து தெரிவித்து, அத்திட்டத்தை, தமிழகத்தில் அரசு செயல்படுத்தாமல் உள்ளது. திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய, மாநில திட்டக்குழு துணை தலைவர் தலைமையில் நான்கு பேர் அடங்கிய குழுவையும், தமிழக அரசு நியமித்தது.
அதே சமயம், விஸ்வகர்மா திட்டத்தை செயல்படுத்துமாறு, பலரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து, அத்திட்டத்தின் வயது வரம்பை, 18க்கு பதில், 35 வயதாக உயர்த்தி அமல்படுத்த, தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக, மத்திய அரசிடம் அனுமதி கேட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
குறு, சிறு தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'வயது வரம்பை, 18 ஆக நிர்ணயித்தால், படித்து முடித்த உடனே குடும்ப தொழில் செய்ய, குடும்பத்தினர் கட்டாயப்படுத்த வாய்ப்புள்ளது; வயது வரம்பை உயர்த்தினால், வேலை தேடும் இளைஞர்கள், தாங்கள் விரும்பிய வேலை செய்வதை உறுதி செய்ய முடியும்' என்றார்.