போர்க்கொடி உயர்த்திய அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்: டிசம்பர் 22ல் பேச்சு நடத்த தமிழக அரசு அழைப்பு
போர்க்கொடி உயர்த்திய அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்: டிசம்பர் 22ல் பேச்சு நடத்த தமிழக அரசு அழைப்பு
UPDATED : டிச 19, 2025 10:12 AM
ADDED : டிச 19, 2025 10:07 AM

நமது நிருபர்
தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, போராட்டங்களை தீவிர படுத்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர். பிரச்னை பூதாகரம் ஆகாமல் தடுக்கும் நோக்கத்துடன் டிசம்பர் 22ல் பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பதாக, 2021 சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக திமுக வாக்குறுதி அளித்து இருந்தது. பழைய பென்ஷன் திட்டத்தையும் அமல் செய்வதாக வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆட்சிக்கு வந்ததும் அந்த கோரிக்கைகளில் பலவற்றை நிறைவேற்றவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கத்தினர், தொடர் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
தேர்தலுக்கு முன்னதாக தங்களது போராட்டங்களை தீவிர படுத்தவும் திட்டமிட்டுள்ளனர். அவர்களை சமாதானம் செய்யும் வகையில், அவ்வப்போது தமிழக அரசு பேச்சு நடத்துவது வாடிக்கையாக இருந்து வருகிறது. அந்த வகையில் வரும் 22ம் தேதி பேச்சுவார்த்தைக்கு வரும்படி அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து வரும் டிசம்பர் 22ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை, தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10வது தளத்தில் உள்ள ஆலோசனைக் கூடத்தில் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

