13 மாவட்டங்களில் மணல் குவாரிகள் விரைவில் திறக்க தமிழக அரசு தீவிரம்
13 மாவட்டங்களில் மணல் குவாரிகள் விரைவில் திறக்க தமிழக அரசு தீவிரம்
ADDED : மே 24, 2025 02:33 AM

சென்னை: 'உச்ச நீதிமன்ற தடை நீங்கியதால், புதிய மணல் குவாரிகள் திறப்பதற்கான பணிகள் விரைவில் துவங்கப்படும்' என, கனிமவளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் கட்டுமான பணிக்கான மணல் குவாரிகள், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முடங்கியுள்ளன. அமலாக்கத் துறை வழக்கு காரணமாக, ஏற்கனவே செயல்பட்டு வந்த 10 குவாரிகள் மூடப்பட்டன.
இந்த குவாரிகளை மீண்டும் திறப்பதற்கான முடிவை, தமிழக அரசு கைவிட்டது. அதேநேரம் புதிய மணல் குவாரிகள் திறக்க, 13 மாவட்டங்களில் இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.
ஒப்பந்ததாரர்களை முடிவு செய்வதில் பிரச்னை ஏற்பட்டதன் காரணமாக, புதிய குவாரி திறக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், புதிய குவாரிகளை திறக்க வேண்டும் என, மணல் லாரி உரிமையாளர்கள், கட்டுமான துறையினர் வலியுறுத்த துவங்கினர். கனிமவளத் துறை அமைச்சராக ரகுபதி நியமிக்கப்பட்டு, இதற்கான பணிகளை துவங்க அறிவுறுத்தப்பட்டது.
இதுகுறித்து, அதிகாரி ஒருவர் கூறியதாவது:
புதிய குவாரிகளுக்கான இடங்கள் 13 மாவட்டங்களில் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சில இடங்களுக்கு மட்டுமே, சுற்றுச்சூழல் அனுமதி உள்ளது.
அதே நேரத்தில் ஒப்பந்ததாரர்கள் தொடர்பான ஒரு வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது.
இதன் காரணமாக, சுற்றுச்சூழல் அனுமதி பெற முடியாத நிலை இருந்தது. சமீபத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, புதிய குவாரிகள் துவங்குவதில் தடையில்லை என, நீதிமன்றத்தால் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான விண்ணப்பங்கள், மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட உள்ளன. ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன், புதிய குவாரிகள் திறக்கப்படும்.